திருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி

* மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்
* சத்துணவு அமைப்பாளர், சமையலர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை, ஜூலை 16: திருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருவண்ணாமலை அடுத்த தண்டரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவை தனித்தனியே செயல்படுகிறது. தொடக்கப்பள்ளியில் 60 மாணவர்களும், உயர்நிலைப்பள்ளியில் 95 மாணவர்களும் படிக்கின்றனர். அதில், நேற்று தொடக்கப்பள்ளியில் 49 மாணவர்களும், உயர்நிலைப்பள்ளியில் 65 மாணவர்களும் பள்ளிக்கு வந்திருந்தனர். இரண்டு பள்ளிகளும் இணைந்து ஒரே மையத்தில் சத்துணவு சமைக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு கொண்டு சென்று மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடுவதால் சனிக்கிழமையான (நேற்று) பள்ளிகள் இயங்கியது. அதையொட்டி நேற்று மதிய உணவுடன் கூடுதலாக சர்க்கரை பொங்கல் சமைத்து மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

பள்ளி வளாகத்தில் வழக்கம் போல் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட்டனர். மாணவர்களுடன் இணைந்து 5 ஆசிரியர்களும் சர்க்கரை பொங்கலை சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், ஒரு மாணவி சாப்பிட்டுக்கொண்டிருந்த சர்க்கரை பொங்கலில் பல்லி இறந்து கிடந்துள்ளது. அதனால் அந்த மாணவி அதிர்ச்சியடைந்து ஆசிரியர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களில் ஒரு சிலருக்கு ஒவ்வாமை காரணமாக வாந்தி ஏற்பட்டது. சில மாணவர்கள் மயக்கம் வருவதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்த 61 மாணவ, மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சமைத்து முடித்த பிறகு, சூடான உணவில் பல்லி விழுந்திருந்ததால் மாணவர்களுக்கு பெரிய அளவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சிகிச்சை முடிந்ததும், படிப்படியாக மாணவர்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கார்த்திகேயன் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், சத்துணவு சமைப்பதில் அலட்சியமாக செயல்பட்டதாக சத்துணவு அமைப்பாளர் சியாமளா மற்றும் சமையலர் மஞ்சுளா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’