திருவண்ணாமலை அரசு கலை கல்லூரிக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி மாணவர்கள் திடீர் போராட்டம்-போலீசார் சமரசம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் அரசு கல்லூரிக்கு செல்ல போதுமான பஸ் வசதி ஏற்படுத்தக்கோரி, மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை கலைஞர் அரசு கலை கல்லூரி கிரிவலப்பாதையில் அமைந்திருக்கிறது. இக்கல்லூரியில், பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர். எனவே, பல்வேறு கிராமங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் மாணவர்கள், பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்ல போதுமான பஸ்கள் இல்லாமல் தவிக்கின்றனர்.பஸ் நிலையத்தில் இருந்து, சுமார் 4 கி.மீ தூரத்தில் கல்லூரி அமைந்திருக்கிறது. எனவே, நடந்து செல்வதும், தினமும் ஆட்டோவுக்கு கட்டணம் செலுத்தி செல்வதும் சிரமம். எனவே, கல்லூரி தொடங்கும் நேரத்திலும், முடியும் நேரத்திலும் போதுமான பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நேற்று காலை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லூரிக்கு செல்ல காத்திருந்தனர். ஆனால், போதுமான பஸ்கள் இல்லை. கல்லூரி வழியாக செல்லும் ஒரு டவுன் பஸ்சில், படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணித்தனர். தொடர்ந்து, நீண்ட நேரமாக பஸ் ஏதும் வரவில்லை.அதனால், அங்கிருந்த மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்துக்குள் வந்த அரசு பஸ்சை முற்றுகையிட்டனர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமரசப்படுத்தி கலைந்துபோக செய்தனர்.தொடர்ந்து, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் தெரிவித்து, உடனடியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், தினசரி கல்லூரி நேரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. எனவே, மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்….

Related posts

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்