திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவ வீதியுலா; வரும் 27ம் தேதி ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை, டிச.21: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மாணிக்கவாசகர் உற்சவத்தை முன்னிட்டு மாடவீதியுலா நடந்தது. உற்சவத்தின் நிறைவாக வரும் 27ம் ேததி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருமுறைத் தலங்களில் ஒன்றாகவும் அமைந்திருக்கிறது. திருமுறைப் பாடல் பெற்ற 275 சிவன் கோயில்களில் அண்ணாமலையார் கோயிலும் ஒன்றாகும். நால்வராலும் பாடல் பெற்ற தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வலம் வந்து திருவெம்பாவையை அருளினார் மாணிக்கவாசகர். மேலும், திருவம்மானை பதிகங்களையும் இங்குதான் அருளினார். எனவே, கிரிவலப் பாதையில் அடிஅண்ணாமலையில் மாணிக்கவாசகருக்கு தனியாக கோயிலும் அமைந்திருக்கிறது.

அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மாணிக்கவாசகர் உற்சவம் கடந்த 18ம் தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. 3ம் நாளான நேற்று அலங்கார ரூபத்தில் மாணிக்கவாசகர் மாடவீதியில் வலம் வந்து அருள்பாலித்தார். உற்வசவத்தின்போது, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுவது சிறப்புக்குரியது. மாணிக்கவாசகர் உற்சவத்தின் நிறைவாக, வரும் 27ம் தேதி, அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் எழுந்தருளளும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது. மேலும், நாளை மறுதினம் (23ம் தேதி) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள், வேணுகோபால சுவாமி, கெஜலட்சுமி அபிஷேகமும், வைகுந்த வாயில் திறப்பும் நடைபெற உள்ளது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்