Thursday, June 27, 2024
Home » திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

by kannappan

திருவண்ணாமலை : சைவ திருத்தலங்களின் திருநகரமான திருவண்ணாமலை தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் முக்தி பெற்ற அருள்நகரம். இறைவனின் திருமேனியாக எழுந்தருளி அருள்தரும் அண்ணாமலையை வலம் வந்து வழிபடுவது பிறவி பெரும் பயனாகும். திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தை தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி. ஆனால், உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் அருள்தரும் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அருள் தரும் திருண்ணாமலை நகரம் சித்ரா பவுர்ணமி  திருநாளான இன்று விழாக்கோலம் பூண்டிருக்கிறது. திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட செருக்கை நீக்க, அடி முடி காணாத அக்னி பிழம்பாக காட்சியளித்தும், ஊடலும், கூடலும் இறைவனுக்கும் இயற்கை என உமையாளுக்கு உணர்த்தி திருவூடல் புரிந்ததும், உமையாளுக்கு இடபாகம் அருளி அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்ததும் திருவண்ணாமலையில் தான். கயிலையின் மீது குடியிருக்கும் ஈசன், கயிலாயமாகவே காட்சி தரும் தனிச்சிறப்பு திருவண்ணாமலைக்கு உண்டு. எனவே தான் லட்சக்கணக்கான  பக்தர்கள் அண்ணாமலையை வலம் வந்து வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ‘சித்ரா பவுர்ணமி’ விழா தனிச்சிறப்பு மிக்கது.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டது. தற்போது, தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் தடை நீங்கி கிரிவலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், இன்று அதிகாலை 2.23 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 1.17 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறப்பும், தொடர்ந்து கோ பூஜையும், திருப்பள்ளியெழுச்சியும் நடைபெறும். பின்னர், இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மற்றும் ₹50 கட்டண தரிசனம் உண்டு. அதையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், நிழற்பந்தல், தரை விரிப்புகள் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடக்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா, திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இன்றும், நாளையும் 2,806 அரசு சிறப்பு பஸ்கள், 201 தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 932 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதையொட்டி, நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து நருக்குள் வர வசதியாக மினி பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்களில் தனிநபர் கட்டணம் அதிகபட்சம் ₹30 முதல் ₹50 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 32 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலம் அனுமதித்திருப்பதால், ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காணும் கேமராதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறுகையில், ‘பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக வடக்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 5 டிஐஜிக்கள், 5 எஸ்பிக்கள் உட்பட 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் 9 தற்காலிக பஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு மேகராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் குற்ற செயல்களை தடுக்க குற்றவாளிகளின் முகங்கள் அடையாளம் காணும் வகையில்(பேஸ் ரிககனேஷன் கேமரா) கேமராக்கள் ராஜகோபுரம், அம்மனி அம்மன் கோபுரதில் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கிரிவலப்பாதையில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கிரிவலப்பாதை கண்காணிப்பு பணிக்காக பைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 30 பேர் கொண்ட க்ரைம் டீம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பேஸ் டேக் மொபைல் செயலி உள்ளது. அதன் மூலம் குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார். அப்போது, எஸ்பி பவன்குமார், ஏஎஸ்பி கிரண்சுருதி மற்றும் பலர் உடனிருந்தனர்.தீப மலை மீது ஏற தடைகிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக 15 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2  நாட்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய அனுமதியில்லை.  எனவே, புறவழிச்சாலைகள் மற்றும் மாற்றுப்பாதைகளில் கனரக வாகனங்கள் அமைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபமலை  மீது பக்தர்கள் ஏற தடை செய்யப்பட்டுள்ளன. அன்னதானம் வழக்குவதற்கு முன்  அனுமதி பெற்றவர்கள் 40 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.சித்ர குப்தனுக்கு சிறப்பு பூஜைசித்ரா பவுர்ணமியையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் அம்மன் சன்னதி எதிரே உள்ள சித்ர குப்தன் சன்னதியில் சிறப்பு பூஜை நடப்பது தனிச்சிறப்பு. இந்த வழிபாட்டின் பின்னணியில் கூறப்படும் தகவல்கள் மிகவும் சுவையானது. சித்திரை மாதத்தில் அமையும் பவுர்ணமி என்பதாலும், இறைவனின் இடபாகம் பெற்ற உமையாள் தீட்டிய சித்திரத்தில் இருந்து சித்திர குப்தன் உயிர்பெற்ற நாள் என்பதாலும் ‘சித்ரா பவுர்ணமி’ என அழைக்கப்படுவதாக இருவேறு ஆன்மிக பின்னணிகள் கூறப்படுகிறது.ஒரு சமயம் இறைவனுடன் திருவிளையாடல் கொண்டிருந்த அன்னை பார்வதி தேவி, தனது கைவண்ணத்தால் மிகச்சிறந்த மழலையின் சித்திரத்தை(ஓவியம்) வரைந்தார். அது சித்திரம் போல இல்லாமல் அசலான ஒரு குழந்தை போன்றே காட்சியளித்தது. சித்திரத்தை வியந்து பார்த்த சிவபெருமான் அதற்கு உயிர் கொடுக்க விரும்பினார். அந்த சித்திரத்தின் மீது தனது மூச்சுக்காற்றை படரவிட்டார். சித்திரம் உயிர்பெற்று குழந்தையாய் தவழ்ந்தது. அதனால் அன்னையின் அகம் மகிழ்ந்தது. சித்திரத்தால் உருவானதால் அந்த குழந்தையை சித்திரகுப்தன் என்றழைத்தார்.சித்திரத்தில் உருவான குழந்தைதான் எமதர்மனின் வேண்டுகோளை ஏற்று மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தனாக பிரம்மாவால் நியமிக்கப்பட்டார். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பவுர்ணமி இணைந்த நாளில் அன்னை பார்வதி தேவி தீட்டிய சித்திரத்தால் உருவானதால் சித்ரா பவுர்ணமி விழாவில் சித்திர குப்தனுக்கு தனி வழிபாடு நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே, சித்திர குப்தன் சன்னதியில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வேலூரில் இருந்து 300 போலீசார் பயணம்

சித்ரா பவுர்ணமியன்று 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலையில் கூடுவார்கள் என்பதால் அம்மாவட்ட போலீசார் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இருந்து 300 போலீசார் நேற்று காலை 7 மணியளவில் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் இருந்து காவல்துறை வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

You may also like

Leave a Comment

nineteen − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi