திருமுருகனின் திருவடியார்கள்…

பங்குனி உத்திர நாளில் திருமுருகனையும் அவனது அடியார் பெருமக்களையும்
சிந்தையில் இருத்தி வழிபடுவோம். அடியார்களே எல்லா காலங்களிலும் நமக்கு
வழிகாட்டியாக இருக்கின்றனர். எனவே, காலந்தோறும் தொடரும் அடியார்களை மனதில்
நினைக்கும் வண்ணம் இருபது அரிய அடியார்களை குறித்த தகவல்களை இங்கு
அளித்துள்ளோம்.  1. செந்தில்வாழ் அந்தணர்கள்உலகெங்கும்
தமிழ்க் கடவுளாம் முருகன் வீற்றியிருக்கும் ஆலயங்கள் பல உள்ளன. அவற்றுள்
மணிமகுடமாய் விளங்குவது திருச்செந்தூரிலுள்ள செந்திலாண்டவன் ஆலயமாகும்.
செந்தில் நகரில் சிங்காதனத்தில் வீற்றிருந்தருளும் முருகக்கடவுளின் தாமரை
போன்ற திருவடிகளை நாடெங்கும் பரவிப்பணிசெய்திட திரிசுதந்திரர் எனத் திகழும்
அந்தணர்கள் இரண்டாயிரம் பேர் இருந்தனர். இவர்கள் கங்கை கரையில் தவம்
செய்து பூலோகம், சொர்க்கலோகம், சத்தியலோகம் ஆகிய மூன்று உலகங்களிலும்
சென்று வசிக்கும்  பிரம்மன், திருமால், சிவன் மூவரிடத்தும் பெற்ற
காரணத்தால் திரிசுதந்திரர் எனப்பெயர் பெற்றனர். அனுதினமும் தானமும், தவமும்
நன்கு செய்யத்தக்கவர். உலகில் நடக்கபோவதையெல்லாம் முன்கூட்டியே
அறியக் கூடியவர்கள். உலக மக்களின் நலன்களை விரும்பக்கூடியவர்கள். இவர்கள்
அந்தணர்களுக்கு உரிய தொழிலாகிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்
ஆகியவைகளை செய்து இந்த உலகினை வழிப்படுத்துகிறார்கள். தினமும், சூர்ய
உதயத்திற்கு முன் எழுந்து, நீராடி பூஜைகளுக்கு ஏற்ற மலர்களால் பூஜித்து
வருபவர்கள். இவர்கள் வறுமையில் வாடினாலும் உண்மை நெறியில் சிறிதும்
விலகமாட்டார்கள். இவ்வாறாக, செந்தில் (முருகன்) பதியில் வாழ்ந்தவர்கள்
செந்தில் அந்தணர்களாவர்.2. பகீரதர்சூர்ய வம்சத்தில்
பிறந்து இந்த உலகத்தை காத்தருளியவர்கள் ஏராளம். அந்த வரிசையில், கங்கை
நதியினை இந்த உலகம் முழுவதும் கரைபுரண்டு ஓடச்செய்தவன் வீரமிக்க பகீரத
மன்னன் ஆவான். இந்த மன்னன், தான் ஆட்சி புரியும் மக்கள் அனைவரையும் அன்போடு
காத்துவந்தான். இதனை பொறுக்கமுடியாத கோரன் என்னும் மன்னன், படையெடுத்து
வந்தான். அரசையும், நாட்டிலுள்ள செல்வங் களையும் கவர்ந்து பகீரத மன்னனை
தோல்வியடைய செய்தான். மனமுடைந்த பகீரதர், சுக்கிர பகவானை வேண்டினான்.
முருகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க ஆணை யிட்டார் சுக்கிர பகவான். அதன்
படி விரதம் இருந்த பகீரதர், இழந்ததை மீண்டும் பெற்றார். அன்று முதல்
முருகப் பெருமானே கதி என்று வாழ்ந்து, செவ்வனே ஆட்சி செய்தான்.3. ஆலயத் தொண்டர்முற்பிறப்பில்
தவமிருந்து பெற்ற பயனால் இவ்வுலகத்தில் பிறந்து, முருகனின் ஆலயத்தில்
பணிசெய்யும் தொண்டினை ஏற்று, அழகன் கந்தவேளின் சிலைக்கு திருமஞ்சனம்
செய்து, அழகிய பட்டாலும், மலர்களாலும் அலங்காரம் செய்து, வேலனின் பல்வேறு
திருநாமங்களைக் கூறி அர்ச்சனை செய்வது. மேலும், இது போன்ற பிற
இறைதொண்டாற்றி இனிது வாழ்ந்து, முருகனின் திருவடி அடைந்த பின்னரும் அங்கும்
முருக பிரானுக்கு வேண்டிய பணிகளை செய்வார்கள் இந்த ஆலயத்தொண்டர்கள்.4.) முசுகுந்தர்கயிலையில்
சிவபெருமானும், தேவியும் வீற்றிருந்த சோலையில் ஒரு ஆண்முசு (குரங்கு)
வில்வ இலைகளை பறித்து அவர்கள் மீது வீசிவந்தது. அந்த முசுவிற்கு நல்ல பயன்
கிடைக்கும் காலம் என்பதால், சிவபெருமானின் ஆணையை ஏற்று தேவி அந்த
முசுவிற்கு ஞானத்தை அளித்தாள். அந்தக் குரங்கு தான் செய்த தவறை எண்ணி
வருந்தியது. `நீ வீசி எறிந்த வில்வம் எங்கள் மீது விழ, அது பூஜை பலனாக
மாறியது. வருந்தாதே என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார் சிவ பெருமான். `ஐயனே
நான் இதே முசு முகத்துடன் மண்ணில் பிறக்க வேண்டுகிறேன். அப்போதுதான்
ஆணவம் என்னை பற்றாது’ என்றார். அது போலவே, பூவுலகில் பிறந்து உண்மையை
உரைப்பவன் என உலகம் போற்றும் அரிச்சந்திரன் மரபில் பிறந்து, முசுகுந்தன் என
பெயர் பெற்றார். மேலும், வசிஷ்டர் முனிவரின் உபதேசப்படி கிருத்திகை
விரதம், கந்தசஷ்டி விரதம், சுக்ரவார விரதம் (வெள்ளிக்கிழமை விரதம்) போன்ற
விரதமிருந்து முருகனின் அருளை பெற்றார். முசுகுந்தர் தவமிருந்து
முருகவேளின் திருவடியடைந்தார்.5. கடுவன் இளஎயினனார்பழமை
வாய்ந்த சங்கத் தமிழ் நூல்களுள் ஒன்று ‘‘பரிப்பாடல்”. அதில், ஐந்தாம்
பாடலைப் பாடியவர் கடுவன் இளஎயினனார். இவர், முருகப்பெருமானிடம் எந்தாய்
எமக்கு வேண்டுவன பொன்னும், பொருளும், போகமும் அல்ல. நின்பால் அன்பும்,
அருளும், அறனுமே வேண்டும் என்று தினமும் வேண்டினான். இவர் சிறந்த
முருகபக்தராக சிலகாலம் சிறப்பாக வாழ்ந்து கந்தன் திருவடியில் சேர்ந்தார்.6. நல்லந்துவனார்மதுரை
மாநகரில், சதாசர்வ காலமும் முருகப்பெருமானையே வழிபட்ட ஒரு குடும்பத்தில்
பிறந்தவர் நல்லந்துவனார். தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வத்தால், இலக்கிய
இலக்கணங்கள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்தார். கவிபாடும் புலமையும் பெற்றார்.
‘‘பரிபாடல்” என்ற நூலில் எட்டாம் பாடலை இயற்றினார். அப்பாடலில்,
திருப்பரங்குன்றம் முருகனின் பெருமைகளை பற்றி கூறியிருந்தார். இவர்
சிறப்பாக வாழ்ந்த பின் இறைவன் திருவடி சேர்ந்தார்.7. நாகனார்இயற்கை
வளமும், செல்வமும் நிறைந்து விளங்கும் நாடு உடுப்பூர் (காளஹாஸ்தி
அருகே…) அதுமட்டுமல்லாது, இந்த ஊரில் மனம், மொழி, மெய்களால் கந்தவேலவனைப்
போற்றி வழிபடும் மக்கள் வாழ்ந்தார்கள். மக்கள் செய்த தவப்பயனாய் நாகன்
என்பவன் பிறந்து வளர்ந்து, நடுநிலை தவறாது நீதி முறைப்படி அரசனானான்.
முருகப்பெருமானையே தனது குலதெய்வமாக வணங்கி வந்தான். தத்தை என்பவளை மணந்து
நல்ல படியாக குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களுக்கு குழந்தை
இல்லாததால் மனமுடைந்து காணப்பட்டார் மன்னன் நாகன். இதனால்,
முருகப்பெருமானுக்கு மிகப்பெரிய அளவில் திருவிழா செய்ய எண்ணி மிக
பிரம்மாண்டமாக விழா நடத்தினார். அதில், மனம் குளிர்ந்த முருகப்பெருமான்
நாகனாருக்கு குழந்தை வரமளித்தார். அந்த குழந்தைக்கு, திண்ணனார் என பெயர்
சூட்டினார் மன்னன். இந்த திண்ணனாரே, பின்னர் கண்ணப்ப நாயனார்
எனப்போற்றப்பட்டார்.8. நல்லியக் கோடர்நல்லியக்கோடன் ஒரு
சிற்றரசன். (திண்டிவனத்தை ஆண்டவன்) இவன் சிறந்த கொடைவள்ளலாக வாழ்ந்தான்.
இவன் ஓவியர் குடியிற் பிறந்தவன். பகைவர்கள் அஞ்சும்படி நல்ல முறையில்
அரசாண்டான். இவர் சிறந்த முருகபக்தனாகவும் இருந்தார். இவரை பல மன்னர்கள்
போரில் தோற்கடிக்க எண்ணினர் ஆனால் முடியவில்லை. தோல்வியடைந்த மன்னர்கள்
அனைவரும் ஒன்று சேர்ந்து நல்லியக்கோடரை தோற்கடிக்க முயற்சித்தனர். இதில்,
தாக்கு பிடிக்க முடியாது நல்லியக்கோடர் திண்டாடினார். துன்பத்தின்
எல்லைக்கே சென்றார் நல்லியக்கோடர். முருகப்பெருமானிடம் முறையிட்டான்.
`அன்று நீ அசுரர்களை அழித்துத் தேவர்களை காத்தருளினாய். திரிபுரங்களை
அழித்துப் பல்லுயிர்களை காத்த சிவபெருமானின் புதல்வன் நீ எனில் உன்னுடைய
அடிமை நான் என்னில், எனக்கும் எனது படை வீரர்களுக்கும் பலத்தை கொடுத்து
வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்று அழுதான் மன்னன் நல்லியக்கோடர். கனவில்
தோன்றிய முருகப்பெருமான், `எதிர் நாட்டு படை வீரர்களின் மீது பூக்களை வீசி
எறிந்தால் நீ வெற்றி பெறுவாய்’ என்று கூறி மறைந்தார். அதுபோல் செய்ய
தொடங்கினான் நல்லியக்கோடர். அந்த பூக்கள், முருகனின் கையில் இருக்கும்
வேலாக மாறி எதிர் நாட்டு படைகளை வீழ்த்தியது. மகிழ்ச்சியடைந்த
நல்லியக்கோடர், முருகனின் புகழை பரப்பத்தொடங்கினார். இவரின் ஆட்சி
காலத்தில் மக்கள் மிகவும் செழிப்பாக வாழ்ந்தனர். பின்னர், நல்லியக் கோடர்
முருகன் திருவடியில் கலந்தார்.9. சேந்தனார்இயற்கை எழில்
கொஞ்சும் திருவீழிமிழலை என்ற பழமை வாய்ந்த ஊரில் ஒரு நல்ல குடும்பத்தில்
பிறந்தவர் சேந்தனார் என்பவர். கலைகள் முற்றுங்கற்றுணர்ந்தவராய்
விளங்கினார். முருகப்பெருமானின் மீது தீவிர பக்தி கொண்டவராக இருந்தார்.
சேந்தனார், திருவிடைக்கழி முருகபிரான் மீது ஒரு பதிகம் பாடி மகிழ்ந்தார்.
ஒருமுறை தில்லைப்பதியில், தேர்விழாவின் போது தேர் தடைப்பட்டு இருந்தது. இதனை
கேள்விப்பட்ட சேந்தனார், விரைந்து அங்கு சென்று தேரின் முன்னின்று
`முப்புரம் எரித்தழித்த கருணைக்கடலே இது முறையா’? எனக்கூறி இருகரங்குவித்து
‘‘மன்னுக” என்று தொடங்கும் திருப்பல்லாண்டு பாடலைப் பாடினார். பாடி
முடித்ததும் அசையாமல் இருந்த தேர், அசைந்தாடி சென்றது. இதனை பார்த்த மக்கள்
சேந்தனாரை வணங்கினர். ஊர் மக்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால்,
முருகப்பெருமானை வேண்டி அதனை சரிசெய்வார் சேந்தனார். இப்படி மக்களுக்காகவே
வாழ்ந்து கந்தனின் திருவடி சேர்ந்தார். 10. கச்சியப்ப சிவாச்சாரியார்காஞ்சிபுரத்தில்
உள்ள குமரக்கோட்டத்தில் காளத்தியப்ப சிவாச்சாரியார் என்பவர் அர்ச்சகராக
இருந்தார். கந்தக் கடவுள் அருளால் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதனை
சீரோடும், சிறப்போடும் வளர்த்து கல்வி அறிவு போன்றவற்றை அந்த குழந்தைக்கு
கொடுத்தார். உபநயனம் செய்து சிறந்த குருவிடம் சைவ தீட்சையும் பெறுமாறு
செய்தார். அதன் பின்னர், மகனை நல்ல நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டோம்
என்கின்ற மன நிம்மதியோடு தனது பூஜை காரியங்களில் ஈடுபட்டுவந்தார். அப்போது,
கனவில் தோன்றிய முருகவேள், `நமது புராணங்களை தமிழில் தருக’ என
கட்டளையிட்டும் “திகட சக்கர’’ என தொடங்கும் முதல் வார்த்தையையும்
எடுத்துதந்து மறைந்தார். கச்சியப்ப சிவாச்சாரியார், முருகவேள் ஆணைக்கு
இணங்க ஓலைச்சுவடியில் எழுதி முருகன் முன்னிலையில் வைத்தார். அதிலிருந்த சில
பிழைகளை திருத்தினார் முருகப்பெருமான். இதனை கண்டு ஆச்சரியப்பட்டார்
கச்சியப்ப சிவாச்சாரியார். மேலும், கந்தபுராணம் என்ற நூலின் தொடக்கம் “திகட
சக்கரம்” எனத் தொடங்குகிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் வாழ்ந்த காலம் 11ம்
நூற்றாண்டின் இறுதியும், 12ம் நூற்றாண்டின் துவக்கமும் ஆகும். 11. முருகம்மையார்சோழ
நாட்டில் உள்ள ஒரு ஊரில், முருகப்பெருமானின் திருவடியின்றி வேறெதையும்
கருதாது ஒரு தம்பதி வாழ்ந்து வந்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பேறு
வாய்க்கப்பெறாமல் வருந்தினர். அப்போது ஒரு நாள் இவர்கள் இல்லத்திற்கு ஒரு
ஜோதிடர் வந்தார். `எங்களுக்கு மகப்பேறு இல்லாமல் வருந்துகின்றோம். இதற்கு
ஒரு தீர்வு சொல்லுங்கள்’ என கேட்க. `உங்களுக்கு முருகப்பெருமானின் அருள்
உள்ளது. நிச்சயம் ஒரு பெண் குழந்தை பிறக்கும். `அதற்கு நீங்கள்
கிருத்திகை நட்சத்திரம் வரும் நாள், செவ்வாய்க் கிழமை ஆகிய தினங்களில்
முருகன் கோயிலை வலம் வந்து, அடியார்களுக்கு உணவளித்து அதன் பிறகு நீங்கள்
உணவருந்துங்கள்’ என்று கூறி மறைந்தார் அந்த ஜோதிடர். வந்தது முருகபெருமான்
தான் என்பதினை உணர்ந்த தம்பதிகள், அவர் சொல்லியபடி செய்து முடித்தனர்.
அழகான ஓர் பெண்குழந்தை பிறந்தது. அதற்கு முருகம்மை என்று பெயர்
சூட்டினர். பருவ வயது வந்தவுடன், முருகம்மையின் பெற்றோர்கள் அவளுக்கு
திருமணம் நடத்தி முடித்தார்கள். முருகம்மையின் மீது பொறாமை குணம் கொண்ட
சிலர், அவளின் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி சூழ்ச்சி செய்தனர்.
இதில் சினம் கொண்ட முருகம்மையின் கணவர், அவளின் கைகளை  துண்டித்தான்.
முருகா…முருகா…முருகா… என முருகம்மை துடித்தாள். ஒருமுறை அழைத்தாலே
முருகப்பெருமான் ஓடி வந்துவிடுவான். அதுவும் முருகம்மை அழைத்தால் வராமல்
இருப்பானாயென்ன? முருகப்பெருமான் தோன்றி வெட்டப்பட்ட கைகளை முன்புபோலாக்கி
முருகம்மையாரை தனது உலகிற்கு அழைத்து தம்முடைய தேவியர்க்கு மலர்சூட்டும்
பணிமகளாக இருக்க அருளினார்.12. திருஞான சம்பந்த தேசிகர்திருஞான
சம்பந்த தேசிகர், 17ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். முருகன் அருளால், பல
நன்மைகளை செய்து வருகிறது தருமபுர ஆதீனம். இந்த ஆதீனத்திற்கு குமரி முதல்
காசி வரை மடங்கள் பல உள்ளன. திருஞான சம்பந்த தேசிகர், தருமபுர ஆதீனத்தில்
ஆறாம்பட்டம் வகித்த குருமூர்த்தி ஆவார். தன் மாணவர்களோடு வேள்விமலை என்னும்
முருகப்பெருமானின் கோயிலுக்கு சென்றார். `இங்கு வள்ளித்தாய் இல்லையோ’ என
மனம் வருந்திக்கேட்டார். `அன்பா நீ வருந்த வேண்டாம் இதோ இருக்கிறேன்’ என
வள்ளித்தாயார் உடனே காட்சியளித்தார். தேசிகர், வியந்து போற்றி மகிழ்ந்தார்.
திருஞான சம்பந்த தேசிகர், தம்முடைய மாணவர்களின் சிறந்தவரான சம்பந்த
சரணாலயர் என்பவருக்கு ஞானோபதேசம் செய்வித்தார். அதன் பின் முக்தி
நிலையடைந்தார்.13. மார்க்க சகாய தேவர்திருவிரிஞ்சிபுரம்
என்ற தலத்தில் மார்க்க சகாயர் என்றொரு பெரியவர் வாழ்ந்தார். இவர்
முருகப்பெருமானிடம் அதி தீவிர பக்தி கொண்டவர். ஒருநாள் வழக்கம் போல்
முருகனாலயம் சென்று சடாட்சரத்தை பலமுறை கூறி வழிப்படும்போது,
கந்தப்பெருமான் சிறு குழந்தை வடிவத்தில் இவர்முன் காட்சிதந்து
மறைந்தருளினார். அந்த தெய்வக் காட்சியால் மெய்சிலிர்த்த மார்க்க சகாயர்
வியந்து போற்றி வணங்கினார். குழந்தை வடிவேல் முருகனின் பெருமைகளை பரப்பும்
வகையில், “திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்’’ என்று பாடி மகிழ்ந்தார்.
மேலும், நக்கீரரிடத்தும் அருணகிரியாரிடத்தும் அளவிலா பக்தி பூண்டவர்.
சிலகாலம் மகிழ்வுடன் வாழ்ந்து கந்தபிரான் திருவடியடைந்தார்.14. கவிராஜ பண்டாரத்தடிகள்கன்னிவள
நன்னாடு என்று போற்றப்படும் பாண்டிய நாட்டில் செங்கோட்டை என்ற ஊரில்
முருகபிரானின் பக்தர்களாக பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் நலம்பல
பெற்று விளங்கும் ஒரு சிறந்த குடும்பத்தில் கவிராஜ பண்டாரத்தார் பிறந்தார்.
இவர் தமிழ் நூல்களைக் கற்று கந்தக் கடவுளின் திருவடிகளைத் தொழுவதையே தமது
தொண்டாக கொண்டார். மேலும், எங்கெல்லாம் முருகனின் ஆலயங்கள் உள்ளதோ அங்கு
சென்று மனம், மொழி, மெய்யால் வணங்கி வந்தார். இவர் “திருமலை
பிள்ளைத்தமிழ்’’ என்ற ஒரு இனிமையான பிள்ளைத்தமிழ் நூலையும்,
திருக்குற்றாலக் கலம்பகம் என்ற நூலையும் இயற்றினார். இவர் மற்றவர்களுக்கும்
நல்வழி போதித்தார். சில காலம் பெயரோடும், புகழோடும் வாழ்ந்துவந்த கவிராஜர்
ஒரு மங்களநாளில் கந்தனின் திருவடியடைந்தார்.15. சிதம்பரமுனிவர்கலைகள்
பல நிறைந்த காஞ்சிபுரத்தில் பிறந்தவர் சிதம்பரமுனிவர். தனது தந்தையிடம்
தமிழைக்கற்று கருணைக்கடவுளான முருகப்பெருமானை போற்றி வணங்கி திருத்தொண்டு
செய்வதே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்தார். அதனை செவ்வனே செய்தும்
வந்தார். ஒரு நாள் எத்தகைய மருந்தாலும் குணப்படுத்த முடியாத நோயால்
பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளானார். தினமும் நாம் தொண்டு செய்யும் குமரனின்
அருள் இருந்தால்தான் நமது வினைப்பயனால் ஏற்பட்ட இந்நோய் நீங்கும் என்பதை 
சிதம்பரமுனிவர் உணர்ந்தார். மனமுருகி காஞ்சி முக்தி மண்டபத்தில் அமர்ந்து
ஆறுமுகக் கடவுளைத் தியானித்தார். அப்போது, வடிவேல் முருகன்
அங்கெழுந்தருளித் தமது திருக்கரத்தால் இவரது உடலை வருடி, சிரசில் திருவடி
சூட்டி அந்த நோயை குணப்படுத்தினார். கொடிய நோய் நீங்கப்பெற்றுத் தம்முடைய
மேனி அழகோடு திகழ்வதைக் கண்டுவியந்து மகிழ்ந்து, முருகபிரான் அருளைப்
போற்றி அமிழ்தினும் இனிய கோவைப்பிள்ளைத்தமிழ் நூல் இயற்றினார். இந்நூல்
நூறு தலங்களைப்பற்றி கூறுகிறது. பல தலத்து வரலாறுகளும், பலபெரியோர்
வரலாறுகளும் பொதிந்து கிடக்கின்ற அருமையான நூலாக இவரது பிள்ளைத்தமிழ்
அமைந்துள்ளது. முருகபிரானின் திருவடிகளைப் பரவிச் சிலகாலம் வாழ்ந்து ஒரு
நல்ல நாளில் தேவர் மலர்மழை தூவக் கந்தன் திருவடியடைந்தார்.16. கவி குஞ்சரபாரதிதென்பாண்டி
வளநாட்டில் பெருங்கரை என்ற பழமை வாய்ந்த ஊரில் சுப்பிரமணியம் என்பவர்
சிறப்போடு வாழ்ந்து வந்தார். பலகாலம் மகப்பேறுயின்றி வருந்திய
சுப்பிரமணியம், பின்னர் முருகப்பெருமானின் திருவருளால் ஒரு ஆண் குழந்தை
பிறந்தது. அந்த குழந்தையை சிறப்பாக வளர்த்தார். உரிய பருவம் வந்ததும் மகனை
சிறந்த கல்வியாளர்களிடம் அனுப்பி இலக்கியங்கள் அனைத்தையும் கற்கும்படி
செய்தார்.மக்கள் அனைவரும் போற்றும் வகையில் பல புலமைகளை பெற்று
சுப்பிரமணியத்தின் மகன் சிறந்து விளங்கினான். இதை கண்டுணர்ந்த சிவகங்கை
வேந்தன் ‘‘கவி குஞ்சரபாரதி’’ என்ற சிறப்பு பெயரை சுப்பிரமணியன் மகனுக்கு
சூட்டினார். மேலும் சிவிகை, காவலாள் என பல சிறப்புகளை அளித்து ஆதரித்தார்.
கவி குஞ்சரபாரதி, முருகப்பிரான் பெருமைகளை கூறும் கந்த புராணத்தைத் தமிழில்
கீர்த்தனைகளாக பாடினார். அங்கயற்கண் அம்மை மாலை, அடைக்கல நன்மாலை ஆகிய
பாடல்களையும் பாடி புகழ் பெற்றார். கவி குஞ்சரபாரதி, ஒரு நன்னாளில் முருகன்
திருவடிகளை அடைந்தார்.17. மாம்பழக் கவிச்சிங்கம்முருகக்கடவுள்
குடிகொண்டுள்ள பழனியில் முத்தையா என்கின்ற சிற்பி வாழ்ந்து வந்தார். அவர்
செய்த புண்ணியங்களினால் மாம்பழம் போன்று இனிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த
குழந்தை மிக அழகுடன் காணப்பட்டாலும் கண்களில் பார்வையில்லை. இதனால்,
முத்தையா வேதனையடைந்தான். அவர் உறங்கும்போது கருணைக் கடவுள் கந்தபிரான்
காட்சித்தந்து, ‘உன் மகனுக்கு புறக்கண் பார்வைதான் இல்லையே தவிர, அந்த
கண்களுக்கு நான் ஒளி என்னும் ஞானத்தை தந்துள்ளேன் கவலை வேண்டாம்’ என்று
கூறி மறைந்தார். தூக்கத்தில் இருந்து எழுந்த முத்தையாவிற்கு ஒரே
மகிழ்ச்சி. அதன் பின்னர் கவலையின்றி மகனை ஆர்வத்தோடு வளர்த்தார். ஆண்டுகள்
செல்ல, மாம்பழம் கல்வியில் சிறந்து விளங்கியதோடுமட்டு மல்லாது,
மேலவர்களிடம் வாதிடும் புலமையும் பெற்றிருந்தார். இதைக் கண்ட தந்தை, தன்
கனவில் இறைவன் கூறியது பலித்ததென்று என நினைத்து மகிழ்ந்தார். மாம்பழத்தை
யாரும் கண் பார்வையற்றவன் என்று கூறிவிட முடியாது. காரணம், சாதாரணமான
மனிதர்களை காட்டிலும் இயல்பாக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியவன்.
இவைகளையெல்லாம் கண்ட பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். மாம் பழம்
எப்போதும் பழனி ஆண்டவனைப் போற்றித் தமிழில் இனிய கீதங்களைப் பாடி
மகிழ்ந்தார்.18. கல்லாடர் மதுரை மாநகரில் வாழ்ந்த
முருகனடியார் ஒருவருக்கு, அவர் வழிபட்டு வந்த முருகனின் அருளால் ஒரு அழகான
ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை சிறப்பாக வளர்த்து உரிய பருவத்தில்
எல்லாக் கலைகளையும் பயில்வித்தார். கல்லாடர் புலமை மிகப்பெற்று
அறிஞர்களெல்லாம் போற்றும் பெருமைகளை பெற்றது அந்த குழந்தை. அனுதினமும்
திருப்பரங்குன்றம் முருகனை வணங்கிய பின்னரே உணவுண்ணுதலை
வழக்கமாக்கிக்கொண்டார். மற்ற நேரங் களில் கற்றறிந்த சான்றோரிடம்
சென்று நல்ல பல கருத்துக்களைக் கேட்டு அறிந்தார். பாண்டிய மன்னன், மதுரை
மாநகரில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவினான். அதில், தமிழ் புலவர்கள்
நாற்பத்தொன்பது நபர்கள் இருந்தனர். அவர்களுள் ஒப்பற்ற ஒருவராக புலமை சிறந்த
கல்லாடரும் இருந்தார். அப்போது ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்ட பாடல்களால் ஆன
‘‘கல்லாடம்” என்ற நூலைக் கல்லாடர் இயற்றினார். மேலும், “திருக்கண்ணப்ப
தேவர் திருமறம்’’ என்னும் நூலையும் இயற்றினார். இவ்வாறு சிறந்த புகழுடன்
வாழ்ந்த கல்லாடர், குமரவேல் அழைக்க குமரலோகம் குடிபுகுந்து இனிது
வாழ்ந்தார்.19. குன்றம் பூதனார்குன்றம் பூதனார் சிறந்த
கல்விமான். கண்டவர் வியக்கும் வண்ணம் அற்புதமான பல பாமாலைகளை
இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டு வாழ்ந்தார். மேலும்,
எங்கெல்லாம் முருகனின் கோயில்கள் உள்ளதோ அங்கெல்லாம் பூதனார் சென்று
வழிபட்டுப் பாமாலைகளை சூட்டி மகிழ்ந்தார். சங்ககால நூல்களுள் ஒன்றான
“பரிபாடலில்’’ ஒன்பது, பதினெட்டாம் பாடல்களைப் பாடியுள்ளார். அந்த
பாடலில், திருப்பரங்குன்றத்தில் உள்ள சோலை, சுனை, அருவி, காந்தள், மயில்,
தினை முதலியவற்றை அழகாக வருணித்து முருகனின் அருளை பெற்றவர்.20. வைத்தியநாத தேசிகர்முருகப்பெருமானின்
பக்தரான வான்மீகநாதர் என்பவர் தனது மனைவி உலகம்மை என்பவரோடு வாழ்ந்து
வந்தார். முருகனிடம் அலாதி பற்று கொண்ட காரணத்தால், இந்த தம்பதிக்கு அழகான
ஆண்குழந்தை பிறந்தது. இந்த புத்திரரே வைத்தியநாத தேசிகர் ஆவார். இவர்
தினமும் கந்தக் கடவுள் ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்டு, உள்ளங்
கசிந்துருகத் தமிழ்க்கவி இனிது என இசைத்து மகிழ்ந்தார். ஒருநாள்
இவரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், `சுவைமிகு தமிழால் என் செவி குளிர
பிள்ளைக்கவி ஒன்று பாடுவாயாக’ என்று கூறி மறைந்தார். கனவில் முருகனைக் கண்ட
வைத்தியநாதர், மறுநாள்  விழித்தெழுந்து மயிலம் என்ற தலத்திற்குச்
சென்றார். அந்த ஆலயத்தில் குடிக்கொண்டிருந்த முருகனை தரிசித்து “மயிலம்
முருகன் பிள்ளைத்தமிழ்’’ பாடினார். மேலும், சில நாள் அங்குத்தங்கி இனிய பல
தமிழ்மாலைகள் சூட்டி மகிழ்ந்தார். வைத்தியநாத தேசிகர், படிக்காசுப்
புலவரின் ஆசிரியர். பாசவதை பரணி, நல்லூர் புராணம், திருவாரூர் பன் மணிமாலை
முதலிய நூல்களை இயற்றினார். வைத்தியநாத தேசிகர், அருணகிரிநாதர் மீது அளவிலா
அன்புக்கொண்டவர்.ரா.ரெங்கராஜன்…

Related posts

மனதிற்கினியான்

தர்மம் கூடவே வரும்!

ஏடுக்கும் சக்தி தந்த ஏக தந்தன்