திருமண நிகழ்ச்சியில் மோதல்

பாகூர், பிப். 13: பாகூர் தாமரைகுளம் வீதியை சேர்ந்தவர் சுரேந்தர் (26). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பாகூர் குருவிநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அந்த சாலையில் இருந்த தனியார் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சாலையிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அப்போது நீங்கள் சாலையில் வாகனத்தை நிறுத்தினால் நாங்கள் எப்படி போவது என்று சுரேந்தர் கேட்டுள்ளார்.

இதனால் அங்கிருந்தவர்களுக்கும், சுரேந்தருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் அவர்கள் சுரேந்தரை தாக்கி உள்ளனர். இதையடுத்து சுரேந்தர் அவருடைய நண்பர் சேகர் (27), கோகுலன் (29) ஆகியோருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். இதனால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதில் அங்கிருந்தவர்கள் சுரேந்தரின் நண்பர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இந்த சம்பவம் பாகூர் இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவியது. உடனே 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்து தனியார் திருமண மண்டபத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமண மண்டபத்தின் கேட்டை பூட்டினர்.

பின்னர் தகவல் அறிந்த தெற்கு பகுதி எஸ்.பி பக்தவச்சலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், நந்தகுமார் ஆகியோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் திருமணம் மண்டபத்திற்கு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் தம்பதியினரை போலீஸார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். மேலும் திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை தனியார் வாடகை வண்டியை வரவழைத்து போலீசாரே அதனை ஏற்றி அனுப்பி வைத்தனர். காயமடைந்த மூன்று பேரும் பாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்கியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு