திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 64 பவுன், ₹30 லட்சம் ஏமாற்றியவர் கைது

ஆவடி, ஜூலை 16 : திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை மிரட்டி 64 பவுன் மற்றும் ₹30 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார். மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம்(40). ஆவடி, காமராஜர் நகர், விஜிஎன் குடியிருப்பை சேர்ந்த சதீஷ்குமார்(40) கார் கண்ணாடியை துடைக்கும் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலே லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தனர்.

இதில், மும்தாஜ் பேகத்திற்கு முதல் கணவன் மூலமாக பிறந்த கை குழந்தை உள்ளது. இதற்கிடையே, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, மும்தாஜ் பேகத்துடன் பலமுறை சதீஷ்குமார் ஜாலியாக ஊர் சுற்றி, தனிமையில் ஒன்றாக இருந்து வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மும்தாஜ் பேகத்திடம் அடிக்கடி சதீஷ்குமார் பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, கோயம்பேட்டில் தனக்கு சொந்தமான வீட்டை விற்று, சதீஷ்குமாரிடம் ₹30 லட்சத்தை மும்தாஜ் பேகம் கொடுத்திருக்கிறார். மேலும், சதீஷ்குமாரின் தங்கை ராகவி திருமணத்துக்கு பெற்ற கடனுக்காக, மும்தாஜ் பேகத்திடம் 64 சவரன் நகைகளை சதீஷ்குமார் கடனை அடைக்க வாங்கியுள்ளார்.

பின்னர், மும்தாஜ் பேகத்தை திருமணம் செய்து கொள்ள முடியாது என சதீஷ்குமாரின் தங்கை ராகவி மற்றும் சீனு முன்பு அடித்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மேலும், அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோவை காட்டி வலைதளங்களில் பரவ விட்டு விடுவேன் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்தாஜ் பேகம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்றுமுன்தினம் மாலை சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ₹30 லட்சம் மற்றும் 64 சவரன் நகைகளை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து கைது செய்யப்பட்டு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை