திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி ஐடி பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஊர்க்காவல் படைவீரர் கைது

அண்ணாநகர்: திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தி ஐடி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊர்க்காவல் படை வீரரை போலீசார் கைது செய்தனர்.கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (28). கோயம்பேடு காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றுகிறார். இவர், தாம்பரத்தில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றும், அமைந்தகரை பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், சிவகுமாருடன் பேசுவதை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், அந்த பெண்ணிடம் தினமும் செல்போனில் பேசி மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கும் வரும் வழியில் மடக்கி ‘‘நீ என்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மீறி வேறு நபரை திருமணம் செய்தால் கொன்றுவிடுவேன்,’ என்று தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், என் மீது போலீசில் புகார் கொடுத்தால் யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அமைந்தகரை பகுதியில் அந்த பெண் நடந்துவந்து கொண்டிருந்தார். அப்போது சிவகுமாரை பார்த்ததும் வேகமாக திரும்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அவரை பின்தொடர்ந்து சென்ற சிவகுமார், அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து, ‘’என்னை திருமணம் செய்து கொள்ளப்போகிறாயா, இல்லையா என்று மிரட்டியதுடன், நீயும் நானும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படத்தை இணையதளம் மூலமாக வெளியிடுவேன்’’ என்று மிரட்டியதுடன். இந்த இடத்துக்கு நாளை வருவேன் நீ பதில் சொல்ல வேண்டும்’’ என்று கூறிவிட்டு, அங்கிருந்து சிவகுமார் சென்றுவிட்டார். இதனால் பயந்துபோன அந்த பெண், நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று  சிவகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர். …

Related posts

மருத்துவ உபகரணங்கள், 100 படுக்கைகளுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ₹40 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

மாநகர பேருந்தில் ₹200 கொடுத்து டிக்கெட் கேட்ட பயணியை தாக்கிய கண்டக்டர்:  தாம்பரம் அருகே பரபரப்பு  சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் கைது