திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம், அக். 21: சங்கராபுரம் அருகே இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் ராமு(24). இவரும் ரங்கப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க பெண் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு காதலித்து வந்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ராமு அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியபோது ராமு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து, அந்த பெண்ணை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ராமு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஹெர்மிஸ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ராமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் 4 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்து உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் ரூ.5லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். சிறைதண்டனை விதிக்கப்பட்ட ராமு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு