திருமங்கலம் நகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

திருமங்கலம், செப்.25: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை திருமங்கலத்தில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. திருமங்கலம் நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து டெங்கு தடுப்பு பணிகள் நேற்று துவங்கப்பட்டது. நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், ஆணையாளர் லினாசைய்மன் மேற்பார்வையில், நகரின் 27 வார்டுகளில் வார்டுகளிலும் புகை மருந்து அடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றும் பணிகள் நடக்கின்றன.

இதுதவிர டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பழுதுநீக்கும் மையங்களில் தேவையற்ற 102 பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனுடன், வாறுகால் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தொடர்பாக, நகராட்சியின் சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவேண்டும். தேவையற்ற பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகளை அப்பறுப்படுத்தவேண்டும்.

வீடுகளில் காணப்படும் உரல், ஆட்டுக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவேண்டும். காய்ச்சல் இருந்தால் நகராட்சி சுகாதார மையம் அல்லது அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. மேலும், வீடுகள், வணிக நிறுவனங்களில் குடிநீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் இருப்பது தெரியவந்தால், அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’