திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெரும்புதூர்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கும், வள்ளி – தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புதிய வீடு கட்டுதல், திருமணம், பதவி உயர்வு ஆகியவற்றிற்கு பரிகார தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள, முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் எட்டு திருப்புகழ் பாடியுள்ளார். கருவறையில் முருகப்பெருமான் கம்பீரமாக 7 அடி உயரத்துடன் காட்சியளிக்கிறார்.

மேலும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் 6 வாரங்கள் வந்து வழிபடுவோருக்கு சொந்த வீடு, திருமணம், குழந்தைப்பேறு ஆகியன கிடைப்பதால், விஷேச நாட்களில் இக்கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து வழிபடுகின்றனர். புராண காலத்தில் பகீரதன் எனும் அரசன் வல்லக்கோட்டைக்கு வந்து, முருகப்பெருமானை வழிபட்டு இழந்த இராஜ்ஜியத்தை பெற்றதாகவும், அதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு இழந்த செல்வங்கள், சொந்த வீடு, உயர் பதவி ஆகியன கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்திரன் இத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை பூசித்து இந்திராணியை மணந்தான். அதனால், இக்கோயிலுக்கு திருமணமாகாத ஆண்களும், பெண்களும் அதிகளவில் வந்து வழிபடுகின்றனர். பல சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கும், உற்சவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சுப்பிரமணியசுவாமி சந்தன காப்பு அலங்காரத்திலும், வள்ளி – தெய்வானை குங்கும் காப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். இதனையடுத்து, உற்சவர் முருகப்பெருமானுக்கு ரத்தினாங்கி அணிவிக்கப்பட்டு, மலர் அலங்கார சேவையில் சஷ்டி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார்.

செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை என்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வல்லக்கோட்டைக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி ‘அரோகரா, அரோகரா’ என்று கோஷமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர். சென்னையிலிருந்து ஏராளமான பக்தர்கள் மலர் காவடிகள் சுமந்து வந்து பெருமானை வழிபட்டனர். அப்போது, பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், மோர், குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் செய்திருந்தார்.

திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் ஆனி மாத கிருத்திகை நேற்று கொண்டாடப்பட்டது. பரணியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை முதற்கொண்டே ஏராளமான பக்தர்கள் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், பேருந்து, வேன் வர தொடங்கினர்.

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கிருத்திகை தின தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் பலரும் பாதயாத்திரையாக வந்து கோயிலை ஒட்டி உள்ள சரவணப் பொய்கையில் நீராடி மொட்டை அடித்து, பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி எடுத்து நான்கு மாட வீதிகளில் உலா வந்து தங்களின் வேண்டுதல்களை நிைறவேற்றினர். கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் எளிதில் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்