திருப்போரூர் காவல் நிலைய எல்லையில் சாய்ந்து விழும்நிலையில் சிசிடிவி கேமரா கம்பம்: சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்போரூர், மே 4: திருப்போரூர் காவல் நிலைய எல்லையில், சாய்ந்து விழும் நிலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள கம்பத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் எடையன்குப்பம் சந்திப்பில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய மூன்று இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் ஒன்றாக சந்திக்கும் இடம் என்பதால் மர்ம நபர்கள் நடமாட்டம், விதி மீறல் வாகனங்கள் போன்றவற்றை கண்காணிக்க திருப்போரூர் போலீசார் இந்த கேமராக்களை இங்கு பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் வாகனம் ஒன்று லேசாக இடித்ததில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கம்பம் சிறிதளவு சாய்ந்து விட்டது. ஓரிரு நாட்களில் விழுந்து விடும் நிலையில் உள்ளதால் இந்த கேமரா பொருத்தப்பட்டுள்ள கம்பத்தை போலீசார் சரிசெய்து சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுமட்டுமின்றி திருப்போரூர் – இள்ளலூர் சந்திப்பு, திருப்போரூர் தேரடி, புறவழிச்சாலை, ரவுண்டானா ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களும் சரியாக இயங்குகிறதா என போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால் போலீசாரின் கண்காணிப்பு அதிகமாக தேவைப்படுகிறது. இந்நிலையில், ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்காததாலும், சில இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ள கம்பங்கள் சாய்ந்து கிடப்பதாலும் குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகைள கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்படுகிறது.
இதன் காரணமாக குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே, திருப்போரூர் காவல் துறை நிர்வாகம் தங்களின் காவல் நிலைய எல்லையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்