திருப்போரூரில் விவசாய நிலங்களில் கொட்டப்படும் கழிவுகள்: விவசாயிகள் கடும் அவதி

 

திருப்போரூர், மார்ச் 11: திருப்போரூரில் விவசாய நிலங்களில் கொட்டப்படும் கழிவுகளால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்போரூர், தண்டலம், காலவாக்கம், கண்ணகப்பட்டு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. ஒரு பக்கம் நகர மயமாக்கலின் காரணமாக வளர்ச்சி அடைந்து வீட்டுமனைப்பிரிவுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் போன்றவை உருவானாலும் மற்றொரு பக்கம் விவசாயமும் நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் நகரப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை 5 கிமீ தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை தற்போது கனரக வாகனங்களும் சென்னை மற்றும் மாமல்லபுரத்திற்கு நேரடியாக செல்லும் வாகனங்களும் பயன்படுத்தி வருகின்றன.

இந்த பகுதியினை ஒட்டி நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் கட்டிட கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல் கழிவுகள், பேப்பர் அட்டைகள், மக்காத கழிவுகளை இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து இந்த புறவழிச்சாலையில் உள்ள விவசாய நிலங்களின் ஓரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

இவ்வாறு கொட்டப்படுவதால் சாலையோரம் உள்ள வாய்க்காலில் தண்ணீர் செல்வது தடுக்கப்படுவதாகவும், நீர் மாசடைவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, விவசாய நிலங்களில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து