திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி -முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேச்சு

திருப்பூர் : தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணி சார்பில்,  திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் மேயர் செல்வராஜ் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சி  நிர்வாகிகளுடன், தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.  இந்நிலையில், தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிமனை காங்கயம் கிராஸ்  ரோடு சி.டி.சி.கார்னர் அருகில் அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று  நடைபெற்றது. மதிமுக அவைத்தலைவர் துரைசாமி தலைமை  வகித்தார். திமுக தெற்கு தொகுதி பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன்  வரவேற்றார். நல்லூர் பகுதி கழக பொறுப்பாளர் மேங்கோ பழனிசாமி முன்னிலை  வகித்தார். இதில் தெற்கு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள்  அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமி கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து  வைத்து பேசியதாவது: கடந்த 10 ஆண்டு காலமாக லஞ்ச,  ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சி, தமிழகத்தை 20 ஆண்டு காலம் பின்னோக்கி கொண்டு  சென்றுவிட்டது. ஜெயலலிதா காலத்திலும், எடப்பாடி பழனிசாமி காலத்திலும்  தமிழ்நாடு குட்டிச்சுவராகி விட்டது. அதேபோல் மத்தியில் உள்ள மோடி  அரசாங்கம், தன்னுடைய மோசமான செயல்பாடுகளால் தமிழக மக்களை மட்டுமின்றி,  இந்திய மக்கள் அனைவரையும் சிரமப்படுத்தி விட்டது. பணமதிப்பிழப்பு,  ஜி.எஸ்.டி.வரி, இந்தி திணிப்பு என மக்கள் மீது பல்வேறு சிரமங்களை திணித்து  வருகிறார்கள். கருணாநிதி இருந்தபோதும் அதற்கு பிறகு ஜெயலலிதா இருந்தபோதும்  மோசமான திட்டங்களை செயல்படுத்தும்போது, மோடியை எதிர்த்தார்கள். ஆனால்,  இந்த நான்காண்டு காலமாக எடப்பாடி பழனிசாமி அரசு எதையும் கண்டுகொள்ளாமல்,  ஏராளமான ஊழல்களை செய்து, தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி கடனை ஏற்படுத்தி  வைத்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது ஒரு அற்புதமான தேர்தல்  அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், 505 தேர்தல் வாக்குறுதிகளை  கொடுத்துள்ளார். அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் விரைவில்  நிறைவேற்றப்படும். திமுக தேர்தல் வாக்குறுதிகளை காப்பியடித்து, நாங்களும்  செய்வோம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது  செய்ய வேண்டியது தானே என்கிறார். தெற்கு தொகுதி வேட்பாளர் செல்வராஜ் எடுக்கும் பணியை  முடிக்காமல் விடமாட்டார். அவர் மேயராக இருந்தபோது, அதிரடியாக  ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்டார். நேர்மையான, நல்ல வேட்பாளரை கழக தலைமை அறிவித்துள்ளது. செல்வராஜ் வெற்றி 100  சதவீதம் உறுதி. ஆகவே, ஒவ்வொருவரும் வீடு, வீடாக சென்று தேர்தல்  வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக்கூறி, அவரை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், திருப்பூர் எம்.பி.சுப்பராயன்,  திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ரவி, மாநகர காங்கிரஸ் கட்சித் தலைவர்  கிருஷ்ணன், மதிமுக மாநகர செயலாளர் நாகராஜ், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர்  முத்துக்கண்ணன், திமுக வடக்கு தொகுதி பொறுப்பாளர் தினேஷ்குமார், மாவட்ட  இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் ராமதாஸ்  மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…