திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிரம் தீபாவளி பலகாரம் செய்ய 13 ஆயிரம் டன் கடலை எண்ணெய் தயாரிப்பு-ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலக்கடலை பிரசித்தி பெற்ற தொழிலாக இருந்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம், கந்திலி, ஜோலார்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எண்ணெய் தயாரிக்கும் 300-க்கும் மேற்பட்ட மரச்ெசக்கு தொழிற்சாலைகள் உள்ளது. குடிசைத் தொழிலாகவும் கடலை எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி நாடுமுழுவதும் கோலாகலமாக ெகாண்டாடப்பட உள்ளது. எனவே மரச்செக்கு கடலை எண்ணெய்க்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் பகல், இரவு பாராமல் மரச்செக்குகள் அனைத்தும் எந்திரங்கள் போல் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் கடலை எண்ணெய்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள சேலம், கோயம்புத்தூர், பவானி, கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா, கர்நாடகா, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பல்வேறு பகுதிகளுக்கு இந்த கடலை எண்ணெய் தயாரித்து அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி, அனைத்து வீடுகளிலும் இனிப்பு, காரம் என்று எண்ணெய்யில் பொரித்த பலகாரங்கள் செய்யப்பட்டு தீபாவளியை மகிழ்ச்சி பொங்கும் தீபாவளியாக கொண்டாடுகின்றனர். இதற்காக மூலப் பொருளாக பயன்படுத்தும் கடலை எண்ணெய் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது என்று திருப்பத்தூர் எண்னை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்தக் கடலை எண்ணெயில் ஒரு சில மரச்செக்கு உரிமையாளர்கள் தங்கள் சொந்த சுய லாபத்திற்காக கலப்பட கடலை எண்ணெய் விற்பனையும் அதிக அளவில் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் கடலை எண்ணெயில் பாமாயில் கலந்தும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் புகார்கள் உள்ளது. ஆனால் மரச்செக்கு எண்ணெய்யினை சுத்தமாக தயாரித்து பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி சுமார் 13 ஆயிரம் டன்  கடலை எண்ணெய் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரச்செக்கு எண்ணெய்களில் கலப்படம் இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரமான எண்ணெய் பார்த்து வாங்குவது எப்படி?இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி பழனிசாமி கூறுகையில், ‘மரச்செக்கினால் தயார் செய்யப்படும் கடலை எண்ணெய் மிகவும் உடலுக்கு நன்மை தரக்கூடியதாகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரச்செக்கு கடலை எண்ணெய், எள் எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் விவசாயிகளால் பயிரிடப்படும் நிலக்கடலை மிகவும் தரம் வாய்ந்த நிலக்கடலையாகும். இந்த நிலக்கடைகளை பதப்படுத்தி காயவைத்து இதனை பிழிந்து அதிலிருந்து கடலை எண்ணெய் எடுத்து விற்பனை செய்கின்றனர். மேலும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தரமற்ற நிலக்கடலைகள் வருகின்றது. அதனை குறைந்த விலையில் வாங்கி ஒரு சில மரச்செக்கு வியாபாரிகள் அதனை அரைத்து அதிலிருந்து கடலை எண்ணெய் எடுத்து அதனை நிறம் மாற்ற பாமாயில் உள்ளிட்டவைகளை கலந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மரச்செக்குகளில் தயார் செய்யப்பட்ட எண்ணெய்களை எடுத்து சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணெய் மரச்செக்கு ஆலைகளுக்கு ₹3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி நெருங்கி வருவதால், கடலை எண்ணெய்கள் தரமானதா என்று பொதுமக்கள் பார்த்து வாங்க வேண்டும். கடலை எண்ணெய் நிறத்தை பார்க்கும் போது மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும்.கலப்பட கடலை எண்ணெயில் பாமாயில் கலந்தால் அந்த கடலை எண்ணெய் நுகரும்போது வாசனை தெரிந்துவிடும். அதேபோல் அந்த எண்ணை நிறம் மிகவும் திடமாக இருக்கும். அதனைப் பார்த்தும் கண்டுபிடித்து விடலாம். சமையலுக்கு கடலை எண்ணெய் பயன்படுத்தும் போது அந்த எண்ணெய் சூடாகி கொதிக்கும்போது கடலை எண்ணெய் மணம் வீசும், பாமாயில் கலந்த என்னை ஒரு விதமான வாசனையை கொடுக்கும் அதை வைத்து கண்டுபிடித்துக் கொள்ளலாம். அந்த எண்ணெய்கள் மீது சந்தேகம் இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தால், நாங்கள் அந்த மரச்செக்கு ஆலையில் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம்’ இவ்வாறு கூறினார்….

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்