திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளியில் அதிமுக மாஜி அமைச்சர் பெயரில் லாரியில் மணல் கடத்தல்: தந்தை, மகனை கைது செய்து எஸ்பி தனிப்படை அதிரடி

நாட்றம்பள்ளி: திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பெயரில் லாரியில் மணல் கடத்திய தந்தை, மகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா மல்லப்பள்ளி ஊராட்சி அன்னசாகரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (40). இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் பெயரை பயன்படுத்தி பல ஆண்டுகளாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில், மணல் கடத்தும் நபர்களை பிடிக்கும் நடவடிக்கையை தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்பி சிபி சக்கரவர்த்தி தீவிரப்படுத்தினார். அவரது உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து மணல் கடத்தல் ஆசாமிகளை கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை வழியாக வந்த டிப்பர் லாரியை தனிப்படை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மணல் கடத்தியது தெரிந்தது. அந்த லாரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் பெயர்கள் பல இடங்களில் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, லாரியில் இருந்த உரிமையாளர் திருப்பதி மற்றும் லாரியை ஓட்டி வந்த அவரது மகன் ஜெகதீசன் ஆகிய 2 பேரையும், டிப்பர் லாரியையும் நாட்றம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து,  திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் திருப்பதி வீட்டின் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் திருட்டு மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.பினாமி பெயரில் இயங்கியதா?மணலுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் பெயர் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. மேலும் லாரியின் முன்பக்க கண்ணாடியில் கே.சி.வீரமணி படம், இரட்டை இலை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதோடு நெடுஞ்சாலைத்துறை சிம்பலும் இருந்தது. பல ஆண்டுகளாக மணல் கடத்தப்பட்டும் கே.சி.வீரமணியின் பெயர் லாரியின் முன்பக்கம் பெரிதாக எழுதியிருந்ததால், போலீசார் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். தற்போது லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பினாமியின் பெயரில் லாரி இயக்கப்பட்டு வந்ததா? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் வீரமணி என்று எழுதப்பட்டிருக்கும் லாரிகள் அனைத்தையும் பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்….

Related posts

கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் எப்படி தர முடியும்? அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

பல்கலையின் நற்பெயருக்கு ஊறுவிளைவித்தால் சீர்மிகு சட்டப்பள்ளியில் இருந்து மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்: பல்கலை முதல்வர் பாலாஜி எச்சரிக்கை

ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரை நீட் தேர்வு ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமித்திருப்பதே மோடி ஆட்சி லட்சணம்: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு