திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு

திருத்தணி, ஜூலை 27: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு என்று போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 தேதிகளில் நடைபெறும் திருப்படி திருவிழாவிற்கு தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்தாண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா நாளை முதல் 31ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தலைமையில் கடந்த 23ம் தேதி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா ஆகிய இரண்டு திருவிழாக்களின்போது சிறப்பு வழி தரிசனக் கட்டணம் ₹200 ஐ குறைத்திட வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் திருக்கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி கட்டணத்தை மாற்றி அமைத்திட திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அரசின் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதன்படி, முதல்வரின் ஆணைப்படி, திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு வழி நுழைவுக் கட்டணம் ₹200 ஐ குறைத்து ₹100 ஐ நடைமுறைப்படுத்திட ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வலி நிவாரண மாத்திரை கேட்டு மெடிக்கல் ஸ்டோரில் தகராறு செய்த 3 வாலிபர்கள் கைது

கர்நாடக அருந்ததியர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

அத்திப்பாளையம் பிரிவில் நெல்லை பெரிய லாலா கார்னர் புதிய கிளை திறப்பு விழா