திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்று பாதை திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

 

திருத்தணி, மே 28: திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும், வாகனங்களில் வந்து செல்லும் பக்தர்களுக்கு ஒரே மலைப்பாதை இருப்பதால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மலைக் கோயிலுக்கு 2வது மலைப்பாதை அமைக்க பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்து அறநிலைத்துறை சார்பில் மலைக் கோயிலில் இருந்து அமிர்தாபுரம் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 2வது மலைப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிலம் கையப்படுத்தி, மலைப்பாதை அமைக்கும் பணிகளுக்கான பூர்வாங்க பணிகளில் அனைத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முருகன் மலைக் கோயிலுக்கு மாற்று பாதைக்காக எடுக்கப்படும் வனத்துறைக்கு சொந்தமான நிலத்திற்கு பதிலாக திருத்தணி அருகே அலமேலு மங்காபுரம் கிராமத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான மலை புறம்போக்கு நிலம் வனத்துறை பெயருக்கு நில மாற்றம் செய்வது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மாவட்ட வன அலுவலர் சுப்பையா ஆகியோர் நேற்று கூட்டு ஆய்வு செய்தனர். வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருக்கோயில் இணை ஆணையர் ரமணி வட்டாட்சியர் மதியழகன், வருவாய் ஆய்வாளர் கமல் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை