திருத்தணி முருகன் கோயிலில் வழக்கத்திற்கு மாறாக குவிந்த கூட்டம்: கடும் போக்குவரத்து நெரிசல்

 

திருத்தணி, பிப்.12: திருத்தணியில் நேற்று ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் மலைக்கோயிலில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அறுபடை வீடுகளில் 5ம் படை வீடாக திகழும் திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை திருமண சுபமுகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாள் என்பதால் நேற்று திருத்தணி கோயிலுக்கு வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் குவிந்தனர். சிறப்பு வழியில் 2 மணி நேரமும், பொது வழியில் 5 மணி நேரமும் பக்தர்கள் மலைக்கோயில் முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு கார், வேன், பஸ், மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களில் குவிந்ததால் மலைக்கோயிலுக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் மலைக்கோயிலுக்கு செல்லும் நுழைவாயில் இருந்து அரக்கோணம் சாலை, மாபொசி சாலை ஆகிய சாலைககளில் வாகன ஓட்டிகள் சுமார் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்நிலையில் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன் உத்தரவின் பேரில் 20க்கும் மேற்பட்ட போலீசார் மலைக்கோயிலிலும், அரக்கோணம் சாலையிலும் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். பிற்பகல் 3 மணிக்கு மேல் திருத்தணியில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை