திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா கோலாகலம்

 

திருத்தணி, ஜன. 1: திருத்தணி முருகன் கோயிலில் அரோகரா கோஷத்துடன் திருப்படி திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி சரிசனம் செய்தனர். திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருடத்தின் 365 நாளை குறிக்கும் வகையில் திருப்படி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி மலைக் கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுக்களில் பக்தர்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்கள் வைத்தும் திருப்புகழ் பாடியபடி மலைக் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

மேலும், படிக்கட்டுக்கள் தோறும் தேங்காய் உடைத்தும் பழங்கள் படையல் வைத்தும் வழிபட்டுக்கொண்டு சென்றனர். அப்போது, பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என சென்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக படித் திருவிழாவை கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் துவக்கிவைத்தனர். திருப்படி திருவிழாவில், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.

முருக பக்தர்கள் குழுக்களாக வந்து ஆண்டை குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 படிக்கட்டுக்களில் மஞ்சள், குங்குமம் பூசியும் கற்பூரம் ஏற்றியும் திருப்புகழ் பாடல்கள் பாடிக்கொண்டு மலைக் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக தென்னக ரயில்வே சார்பில், திருத்தணி-அரக்கோணம் இடையில் நேற்று இரவு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருத்தணி முருகன் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவே நடை திறக்கப்பட்டு, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த தரிசனத்தில் கலந்துகொள்வதற்காக பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை