Sunday, June 30, 2024
Home » திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டித் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டித் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு!

by kannappan

திருச்செந்தூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டித் திருவிழாவிற்கான  முன்னேற்பாடு பணிகளை இன்று (21.10.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.  அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழும் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 2022 ஆம் ஆண்டிற்கான கந்த சஷ்டித் திருவிழா 24.10.2022 முதல் 31.10.2022 வரை நடைபெறவுள்ளது. 30.10.2022 அன்று சூரசம்ஹாரமும், 31.10.2022 அன்று திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இத்திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரிவார்கள். கந்த சஷ்டித் திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளான பக்தர்கள் தங்குமிடம், குடிநீர், கழிவறைகள், மருத்துவ வசதி, வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பு வசதிகள் போன்ற பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்விற்குபின், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி, திருச்செந்தூர், கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தில் பங்கேற்று, முருகன் சூரனை வதம் செய்த சூரசம்ஹார காட்சியை கண்குளிர கண்டு, அதன் பிறகு எழுந்தருளுகின்ற முருகனை தரிசித்து செல்வதற்காக ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக திருக்கல்யாணத்தையும் பார்த்துவிட்டு திரும்புவார்கள்.  இந்நிகழ்ச்சிக்கு பெருமளவில் பக்தகோடிகள் வருவார்கள் என்பதை உணர்ந்து திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் ஆணையர், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுடன் இன்று ஆய்வு செய்தோம். இத்திருக்கோயிலுக்கு வந்து ஆறு நாட்கள் விரதம் இருக்கின்ற பக்தர்களுக்கு 70 ஆயிரம் சதுர அடிக்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்து, தரைவிரிப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதிகள் 13 இடங்களில் ஏற்பாடு செய்வதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஆய்வுக்குப் பிறகு கூடுதலாக 5 இடங்களை தேர்வு செய்து 18 இடங்களில் சுமார் ஒரு லட்சம் சதுர அடி பரப்பிற்கு கூடாரங்களை அமைப்பதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முடிவு செய்து இருக்கின்றோம். மேலும், ஆண்களுக்கு 118 கழிப்பறைகளும், பெண்களுக்கு 119 கழிப்பறைகளும் அமைப்பதோடு, கூடுதலாக 150 தற்காலிக கழிப்பறைகளும் அமைப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறோம். ஆகமொத்தம் சுமார் 380 இடங்களில் கழிப்பிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. பக்தர்களுடைய குடிநீர் தேவைக்காக சுமார் 66 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் திருக்கோயில் பிரகாரத்தில் 15 இடங்களில் பாதுகாக்கப்பட்ட RO Plan நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் நலனுக்காக ஏற்கனவே 4 இடங்களில் மருத்துவ வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 15 இடங்களை தேர்வு செய்து  மொத்தம் 19 இடங்களில் நடமாடும் மருத்துவமனைகளும், மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. பக்தர்கள் எங்கிருந்தாலும் முருகனுடைய தினசரி கோலங்களை  தரிசிப்பதற்கு ஏதுவாக 4 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவை பக்தர்கள் தங்கி இருக்கின்ற இடங்களில் இருந்தும் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையை பொறுத்தளவில் எந்த முறையும் இல்லாத அளவிற்கு இந்த முறை கூடுதல் கவனம் செலுத்தி 31 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து இருக்கின்றது. வெளியிலிருந்து வரும் பக்தர்களுக்காக 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் நீராடும் பக்தர்களின் நலன்கருதி 15 கடல் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டும், 3 டிரோன்களை கொண்டும் காவல் துறை மூலம் முழுவதுமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. சூரசம்ஹாரத்தன்று சுமார் 2,700 காவலர்களை பணியமர்த்தி கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மீதமுள்ள 5 நாட்களில் ஒரு ஷிப்டிற்கு 200 காவலர்கள் வீதம் 2 ஷிப்டிற்கு 400 காவலர்களும், 130 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.  சுகாதாரத்தை பேணிக் காப்பதற்காக திருக்கோயில் இருக்கின்ற 250 தூய்மைப் பணியாளர்களோடு, திருச்செந்தூர் நகராட்சியின் மூலம் தினந்தோறும் ஒரு ஷிப்டிற்கு 150 தூய்மைப் பணியாளர்களை பயன்படுத்த இருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு 650 தூய்மைப் பணியாளர்களை பயன்படுத்த இருக்கின்றோம். மின்சார பணிகள், குடிநீர் வசதி, கழிவறை வசதிகளை கவனிப்பதற்காக தனித்தனியாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல சுகாதாரம் பேணிக்காக்கவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், மருத்துவ வசதிகளை கண்காணிக்கவும் தனித்தனியே இணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படி இந்த முறை எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இறையன்பர்கள், பக்தர்கள் முழுமையாக சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏற்ற வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் தொடர் கண்காணிப்பில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்றால் கந்த சஷ்டி திருவிழாவில் சிறிய அளவிலான தடைகள் ஏற்பட்டதால், இந்தாண்டு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டு, அதற்கேற்ற வகையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.  முதலமைச்சர், பக்தர்கள் நலனை பாதுகாப்பதில் இந்து சமய அறநிலையத்துறைக்கே முழுபொறுப்பு என்று அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த முறை சூரசம்ஹார நிகழ்ச்சியினை மிகச் சிறப்பாக பக்தர்கள் சிரமமின்றி, எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் நடத்தி காட்டுவதற்கு முடிவெடுத்திருக்கிறோம். பக்தர்களும் மகிழ்ச்சியாக சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணத்தை மன நிம்மதியோடு கண்டுகளிக்கும் நல்ல சூழ்நிலை நிலவும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.கேள்வி : கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கத்தேர் ஓடாமல் உள்ளதே? பதில் : தங்கத்தேரை பொறுத்தளவில் சிறிய சிறிய பணிகள் இருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் நாம் மாஸ்டர் பிளானில் எடுத்திருக்கின்ற பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளதால் தங்கத்தேரை ஓட்டுவது குறித்து துறை  அதிகாரிகளோடு கலந்தாலோசித்து முடிவு தெரிவிக்கப்படும். கேள்வி : இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கந்த சஷ்டி விழா நடைபெறுவதால் யாகசாலையை பார்ப்பதற்கு பெருமளவில் பக்தர்கள் வருவார்களே ?பதில் : பக்தர்களுக்கு சிறப்பான தரிசனம் கிடைக்க வேண்டுமென்பதற்காக தான் இந்த முறை பல்வேறு நடைமுறைகளை மாற்றி அமைத்திருக்கின்றோம். பக்தர்கள் தங்குவதற்கு கடந்த காலங்களில் 40,000 சதுர அடி அளவிற்கு தான் பந்தல் அமைத்திருந்தார்கள். இந்த முறை ஒரு லட்சம் சதுர அடி அளவிற்கு  தற்காலிக கொட்டகைகள் 18 இடங்களில் அமைக்கப்பட இருக்கின்றன. கேள்வி : பாரம்பரியமாக கோயிலில் தங்குவதற்கு இந்த அரசு அனுமதி மறுக்கிறது என இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து ?பதில் : பாரம்பரியம் என்பது ஒன்று. அதே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் தரிசனம் முக்கியமா அல்லது 400 பேர்கள் திருக்கோயிலிலே ஆறு நாட்களும் தங்கி தரிசனம் செய்வது முக்கியமா. இரவு நடை அடைத்த பிறகும் பக்தர்கள் உள்ளே தங்குவது முக்கியமா அல்லது ஆகம விதிப்படி நடை அடைத்த பிறகு யாரும் உள்ளே இருக்க கூடாது என்பது முக்கியமா, அடுத்து 400 நபர்கள் உள்ளே இரவு பகலாக தங்கியிருக்கின்ற போது ஏற்படுகின்ற சிறுசிறு சுகாதார சீர்கேடுகளினால் திருக்கோயிலின் தூய்மை பாதிக்கப்படுவது முக்கியமா திருக்கோயிலின் தூய்மை பாதுகாக்கப்படுவது முக்கியமா ? இந்த 400 நபர்களை எப்படி தேர்வு செய்ய முடியும். ஒரு வேளை, ஒருநாள் தெய்வத்தை பார்த்தால் இந்த கந்தசஷ்டியின் போது புண்ணியம் கிடைக்கும் என்று வருகின்ற பக்தர்கள் மத்தியில் ஆறு நாட்களும் நாங்கள் உள்ளே தங்கியிருந்து 15 முறை சுவாமி செய்வது முக்கியமா, ஒருமுறையாவது சுவாமியை தரிசித்தால் போதுமென்ற லட்சக்கணக்கான பக்தர்கள் முக்கியமா என்பதனை உங்களது முடிவிற்கே விட்டுவிடுகிறேன். யாருக்கும் எதிரான ஆட்சி அல்ல இந்த ஆட்சி. அனைத்து பக்தர்களும், இறைவனை தரிசிக்க வேண்டுமென்பதற்காக தான் உள்ளே தங்க அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் அமைத்து தருகின்ற கொட்டகைகளில் எந்த கொட்டகை திருக்கோயில் அருகில் இருக்கிறதோ, அங்கேயே 400 நபர்களும் தங்கி கொள்ளலாம். அனைத்து வசதிகளும் செய்து தர இந்து சமய அறநிலையத்துறை தயாராக உள்ளது.  கேள்வி : கோயில் அருகில் தங்குவதற்கு தனியார் விடுதிகளில் அறை வாடகை அதிகமாக உள்ளதே?பதில் : நிச்சயமாக குறைக்கவும், நியாயமான வாடகை வாங்கவும் சொல்கிறோம். கேள்வி : திருச்செந்தூர் கோயில் திருப்பணிகள் எந்த அளவில் உள்ளது?பதில் : இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த திருக்கோயிலுக்கு ரூ.300 கோடி மதிப்பீட்டிற்கான திருப்பணிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பணிகளை மூன்று ஆண்டு காலத்திற்குள் முடிப்பதற்கு துறை வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளுக்கு இறையன்பர்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்த மிகப்பெரிய திருப்பணி சிறப்பாக நடைபெற ஊடகக் நண்பர்களும் துணை நிற்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உபயதாரர் மூலம் மேற்கொள்ளும் பணிகளை அவர்களே மேற்கொள்வார்கள். அமைப்பும், கட்டுமானப் பணியும் தரமாக உள்ளதா என்பதை மட்டுமே துறை கண்காணிக்கும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் பணிகளை தொடர்ந்து கண்காணிப்பதாக உறுதியளித்திருக்கிறார். இந்த பெருந்திட்டத்தினை நிறைவேற்றி முடிக்கும்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையும். இந்த அரசு ஆன்மிகத்திற்கு, ஆன்மிகவாதிகளுக்கு எதிரான அரசு அல்ல, திருச்செந்தூர் திருப்பணி முன்னுதாரணமாக இருக்கும். கேள்வி : ரூ.300 கோடி மதிப்பீட்டிற்கு திருப்பணிகள் நடக்கும் கோயிலுக்கு இணை ஆணையர் எப்போது நியமிக்கப்படுவார்?பதில் : கடந்த பத்தாண்டுகளில் துறை அலுவலர்களுக்கும், திருக்கோயில் பணியாளர்களுக்கு பதவி உயர்வே இல்லை.  இந்த ஆட்சி வந்தபிறகு 160 நபர்களுக்கு முதல்முறையாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சிலர் இரட்டை பதவி உயர்வு கூட அடைந்திருக்கின்றனர். பணியிடங்களும் கவுன்சிலிங் முறையில் வழங்கப்பட்டது. இதுவும் இந்து சமய வரலாற்றில் முதல்முறையாகும். நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் புதிய இணை ஆணையர் இத்திருக்கோயிலுக்கு நியமிக்கப்படுவார்.     இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ்,, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக பாலாஜி சரவணன், கூடுதல் ஆணையர் திருமகள், வருவாய் கோட்டாட்சியர் புகாரி, அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், உறுப்பினர்கள், இணை ஆணையர் / செயல் அலுவலர் அன்புமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

You may also like

Leave a Comment

four − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi