திருச்செந்தூர், கோவில்பட்டியில் காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம்

திருச்செந்தூர், ஆக. 8: திருச்செந்தூர், கோவில்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து காலிகுடங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் நகராட்சி 19வது வார்டுக்குட்பட்ட முத்துமாலையம்மன் கோயில் தெருவில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை எனக்கூறி நேற்று கவுன்சிலர் மகேந்திரன் தலைமையில் ஊர் தலைவர் முருகேசன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காலிகுடங்களுடன் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்கள் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் நீர் நிரப்பினாலே குடிநீர் விநியோகம் செய்யலாம். ஆனால் நகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய் உடைப்பு, மோட்டார் பழுது என காரணம் கூறி அலைக்கழிக்கின்றனர் என குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

திருக்கோயில் காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி, நகராட்சி பொறியாளர் சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதேபோல் கோவில்பட்டி நகராட்சி 8வது வார்டு புதுகிராமம் வசந்தம் நகர் 1வது தெருவில் ஒரு பகுதியில் குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை.

இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிகுடங்களுடன் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களுடன் நகராட்சி செயற்பொறியாளர் சணல்குமார், வார்டு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களது வீடுகளுக்கு மட்டும் குடிநீர் வரவில்லை. அருகே உள்ள தெருக்களுக்கு சென்று குடிநீர் எடுக்க முயன்றால், அங்குள்ளவர்கள் எங்களை விரட்டுகின்றனர். இதனால் நாங்கள் குடிநீருக்கு கடும் சிரமப்படுகிறோம் என பெண்கள் தெரிவித்தனர். உங்கள் பகுதியை பார்வையிட்டு, சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செயற்பொறியாளரும், வார்டு உறுப்பினரும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்