திருச்சி மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதியளவில் இருப்பு உள்ளது

திருச்சி, செப்.29: திருச்சி மாவட்டத்தில் தற்போது சம்பா நடவு துவங்கியுள்ள நிலையில் அனைத்து உரங்களும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர்(பொ) கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பு சம்பா சாகுபடிக்கு தேவையான அனைத்து உரங்களும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் (பொ) கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, திருச்சி மாவட்ட அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உர விற்பனை நிலையங்களில் யூரியா 5 ஆயிரத்து 379 மெ.டன், டிஏபி ஆயிரத்து 422 மெ.டன், எம்ஓபி ஆயிரத்து 59 மெ.டன் மற்றும் எஸ்எஸ்பி 723 மெ.டன் என்ற அளவில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தேவைக்கு தகுந்த வகையில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் விற்பனை நிலையங்களில் தங்கள் ஆதார் எண்களை தெரிவித்து, உரிய ரசீது பெற்றுக்கொண்டு உரங்களை பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகளின் கிராமங்களுக்கே நேரடியாக வந்து உரம் விற்பனை செய்வோரிடம் உரங்களை நம்பி வாங்க வேண்டாம். அவ்வாறு நேரடியாக விவசாயிகளை அணுகி உரம் விற்பவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால், உடனடியாக அந்தந்த பகுதி வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற உரவிற்பனையாளர்கள், முறையாக விவசாயிகளிடம் இருந்து ஆதார் குறித்த தகவலை பதிவு செய்துகொண்டு, அவர்களின் சாகுபடி பரப்பளவிற்கு தேவையான அளவு உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அதோடு உரங்களின் விலைகள் அடங்கிய விலைப்பட்டியலை விவசாயிகளின் பார்வையில் படும்படியான இடத்தில் வைக்க வேண்டும். உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றக்கொண்டு, அவர்கள் வாங்கும் உரத்துக்கு உரிய ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். மாவட்ட உர விற்பனையாளர்கள் உரங்களை இருப்பு வைத்துக்கொண்டு, போலியான உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தினாலோ, உரிய ரசீது வழங்காமல் விற்பனை செய்தாலோ அல்லது அரசு நிர்ணய விலையைவிட அதிக விலைக்கு விற்றாலோ உரக்கட்டுப்பாடு 1985 சட்ட விதிகளின்படி சம்மந்தப்பட்ட உரவிற்பனையாரின் உரிமம் ரத்து செய்யப்படும்.

உரவிற்பனை நிலையங்களில் உரங்களின் இருப்பு மற்றும் வினியோகம் செய்த அளவு ஆகியவை குறித்து மாவட்ட அளவிலான உரக்கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொள்வர். அதில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் சட்ட விதிகளின்படி, அவர்கள் மீது கோர்ட் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட இணை இயக்குநர் (பொறுப்பு) கண்ணன் எச்சரித்துள்ளார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து