திருச்சி மத்திய மண்டலத்தில் 97 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

*கர்ப்பிணி பெண்கள் 20 ஆயிரம் பேர் செலுத்தினர்திருச்சி : திருச்சி மத்திய மண்டலத்தில் 97 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 20ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதேசமயம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று வரை தமிழகத்தில் 1 கோடியே 97 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் சுகாதார பணியாளர்கள் 8.64 லட்சம் பேர், முண்கள பணியாளர்கள் 11.35 லட்சம் பேர், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 75.87 லட்சம் பேர், 45 முதல் 60 வயது வரை 65.16 லட்சம் பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 36.95 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் 97 சதவீதம் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 1.86 லட்சம் தடுப்பூசியில் 1.71 லட்சம் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அரியலூர் சுகாதார மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 2 லட்சத்தில் 1.84 லட்சம் தடுப்பூசியும், கரூர் சுகாதார மாவட்டத்திற்கு வழங்கப்ட்ட 2.64 லட்சத்தில் 2.63 லட்சமும், மயிலாடுதுறை சுகாதார மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 1.73 லட்சத்தில் 1.67 லட்சமும், நாகை சுகாதார மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 1.73 லட்சத்தில் 1.67 லட்சமும், பெரம்பலூர் சுகாதார மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 1.69 லட்சத்தில் 1.64 லட்சமும், புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் 2.28 லட்சத்தில் 2.19 லட்சமும், தஞ்சை சுகாதார மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 5.72 லட்சத்தில் 5.64 லட்சமும், திருவாரூர் சுகாதார மாவட்டதிற்கு வழங்கப்பட்ட 2.91 லட்சத்தில் கூடுதலாக 2.97 லட்சம் தடுப்பூசியும், திருச்சி சுகாதார மாவட்டத்தில் வழங்கப்பட்ட 7.12 லட்சத்தில் கூடுதலாக 7.56 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி மத்திய மண்டலத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் 97.7 சதவீதம் பொதுமக்களுக்கு இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 20,365 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி அறந்தாங்கியில் 2050, அயரியலூரில் 4368, கரூரில் 1513, மயிலாடுதுறையில் 387, நாகையில் 231, பெரம்பலூரில் 862, புதுக்கோட்டையில் 2688, தஞ்சாவூரில் 2334, திருவாரூரில் 2617, திருச்சியில் 3315 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய மண்டல மாவட்டங்களுக்கு கூடுதலாக 72,000 டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி திருச்சிக்கு 13 ஆயிரம், அறந்தாங்கி 5 ஆயிரம், புதுகை 7 ஆயிரம், அரியலூர் 5 ஆயிரம், பெரம்பலூர் 4 ஆயிரம், கரூர் 7000, தஞ்சை 13,500, திருவாரூர் 7500, நாகை 10 ஆயிரம் என அந்தந்த மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் நேற்று வந்து சேர்ந்தது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல், தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!