திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

 

திருச்சி, ஜூலை 17: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மருதூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர், சாலை விபத்தில் சிக்கி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர், மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து, அவரது உறுப்புகளை தானமாக வழங்க, குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி இதயம் மற்றும் நுரையீரல்கள் சென்னையில் உள்ள மருத்துவமனை பயனாளிக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள பயனாளிக்கும், ஒரு சிறுநீரகம் தஞ்சாவூரில் உள்ள பயனாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கண்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை பயனாளிக்கும் தானமாக வழங்கப்பட்டன.

தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய வழிகாட்டுதலின் படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் பெயர் பட்டியலில் முன்னுரிமை வரிசைப்படி தகுதியான நபரிடமிருந்து தானமாக பெறப்பட்ட உறுப்புகளில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஓராண்டாக சிறுநீரக செயலிழப்பு, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 31 வயது நோயாளிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற 16வது சிறநீரக மாற்று அறுவை சிகிச்சையாகும். அதேபோல், மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து உறுப்புகள் தானமாக பெறுவது இது 7வது முறையாகும் இந்த அறுவை சிகிச்சையானது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் நேரு தலைமையில், மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் மேற்பார்வையிலான மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்பட்டது. சிறுநீரக மருத்துவக்குழு கந்தசாமி, பிரகாஷ், மைவிழிசெல்வி, சிறுநீரக அறுவை சிகிச்சைக் குழு ஜெயப்பிரகாஷ் நாராயணன், ரவி, ராஜேஷ், சந்தோஷ்குமார், பரணி மற்றும் மயக்கவியல் மருத்துவக் குழு கவிதா ராணி, இளவரசன், செவிலியர்கள் ராஜாராணி, சுமதி, உதவியாளர்கள் சதீஷ் பாபு, ராஜ்குமார் ஆகியோர் அறுவை சிகிச்சை பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய ஒருங்கிணைப்பாளர்கள் மாரிசெல்வம், சண்முகப்பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை