திருக்கோயில்களில் தவறுகள் நடைபெறாமல் நெறிமுறைப்படுத்திட 4 துணை ஆட்சியர்கள் தலைமையில் பறக்கும் படைகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருக்கோயில்களில் தவறுகள் நடைபெறாமல் நெறிமுறைப்படுத்திட 4 துணை ஆட்சியர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டிலுள்ள பழமையான திருக்கோயில்களில் அதன் தொன்மை மாறாமல், புதுப்பித்து திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்குகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (21.12.2022) சென்னை, பாடி, அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் திருப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.  அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;  ”இன்றைய தினம் பாடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். இந்த 2 திருக்கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ள மாவட்ட குழு மற்றும் மாநில வல்லுநர் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலுக்கு 1996 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 400 ஆண்டுகள் பழமையான அத்திருக்கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு செய்தல், கொடிமரத்தை சீரமைத்தல், நுழைவு வாயிலில் கோபுரம் அமைத்தல், சனிபகவான் சன்னதியை புதுப்பித்தல், புதிதாக மடப்பள்ளியை அமைத்தல்  போன்ற பணிகளை மேற்கொள்ளவும், ஆலய தூய்மையை பராமரிக்கும் வகையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயிலானது 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இத்திருக்கோயிலுக்கும் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது. தமிழர்களின்  பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பறை சாற்றும் வகையில் திகழ்கின்ற திருக்கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களை புனரமைத்திட ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கினார்கள். அதன் மூலம் இந்தாண்டு 120 திருக்கோயில்கள் தெரிவு செய்யப்பட்டு, புனரமைப்பிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில் நல்ல பொருளாதார நிலையில் உள்ள சிறிய கோயில்களை மேம்படுத்தி, திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஆய்வு செய்திட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஆய்வு செய்த 2 திருக்கோயில்களிலும், 2 ஆண்டு காலத்திற்குள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். அறங்காவலர் குழுவை பொறுத்தளவில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றவுடன் அறங்காவலர் குழுவிற்கான பதவி காலத்தை 3 ஆண்டுகளிலிருந்து 2 ஆண்டுகளாக குறைத்து சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட மாவட்ட அறங்காவலர் குழுவின் பதவி காலம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதுவரையில்   தி.மு.க அரசு பொறுப்பேற்றப்பின் 16 மாவட்டங்களுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இக்குழுவின் வாயிலாக அவர்களின் ஆளுகைக்குகீழ் வருகின்ற அதிகபட்சம் ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் வருகின்ற திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. அந்த வகையில் மாவட்ட அறங்காவலர் குழுக்களின் கூட்டங்களை நடத்தி, சட்ட திட்டங்களின்படி, 2000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், உயர்மட்ட ஆலோசனை குழு பரிந்துரையின்படி 9 முதுநிலைத் திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் சனிக்கிழமையன்று சாமி தரிசனம் செய்ய வருகைதந்த மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமையே டிக்கெட் விற்பனையாளர் ரேவதி, அலுவலக உதவியாளர் ரவி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்திருக்கின்றோம். திருக்கோயிலின் ஆய்வாளர் ஜெயேந்திரன் உடனடியாக மீஞ்சூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் தவறு யார் செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும், துறையின் சார்பில் இது குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் சமம், அனைத்து நிலைகளிலும் சமம் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை இருக்கக் கூடாது என்பது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கருத்தாகும். அந்த வகையில் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செயல்படுத்திட உத்தரவிட்டார்கள். பணியாளர்களின் மென்திறன்களை நல்வழிப்படுத்தவதற்கும், துறை ரீதியாக பயிற்சிகள் வழங்கவும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் ஒரு நிர்வாக பயிற்சி மையம் அமைத்திட 2021 – 22 ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மையத்தில் மண்டல வாரியாக திருக்கோயில் பணியாளர்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் மென்திறன் பயிற்சியும், பொதுமக்களிடமும், பக்தர்களிடமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான மனிதநேய பயிற்சியும் வழங்கப்படும்.  சட்டப்பிரிவு -46 (iii) ன் கீழ் உள்ள 578 பெரிய திருக்கோயில்களில் பயோமேட்ரிக் முறையில் வருகை பதிவேடு செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், “குறைகளை பதிவிடுக“ என்ற ஒரு செயலியை உருவாக்கி அதன்மூலம் 4098 புகார்கள் பெறப்பட்டு 1627 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. பக்தர்கள் குறைகளை தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 48 முதுநிலைத் திருக்கோயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு  தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையிலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள காலங்களில் நெறிமுறைப்படுத்திடவும்  இந்து சமய அறநிலையத்துறை தலைமையிடத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மண்டல இணை ஆணையர்களுக்கு உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் வாக்கிடாக்கி வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களின் பெயர் மற்றும் கைபேசி எண்கள் கொண்ட அறிவிப்பு பலகைகள் வைக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய அறிவிப்பு பலகைகள் இல்லாத திருக்கோயில்களில் உடனடியாக வைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் வழங்கப்படும் ரசீதுகளில் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன், புகார்களை தெரிவிக்க புகார் எண்ணும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டினை நான்கு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு துணை ஆட்சியரை நியமித்து தலைமையில் பறக்கும் படைகளை உருவாக்கி திருக்கோயில்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு சிறிய அளவிலான பிரச்சனைகளுக்கும், தவறுகளுக்கும் இடங்கொடா வண்ணம் நெறிமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  ரோப்கார்களை பொருத்தளவில் பக்தர்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் வாரம் ஒரு முறை பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால் பராமரிப்பு பணிகளை இரவு நேரத்தில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம். இதன்மூலம் எந்த ஒரு ரோப்காரும் பழுதடைந்து நிற்காத சூழ்நிலையை உருவாக்கிட துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அண்ணாமலை அமைச்சர்கள் மீது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது வெளிப்படையான உலகம். இதில் எதையும், மறைத்து வாழ முடியாது. எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம். எந்த நிலையிலும், எதையும் எதிர்கொள்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது. முதலமைச்சரை பொறுத்தளவில், இந்த திராவிட மாடல் ஆட்சியை லஞ்ச லாவண்யத்திற்கு அப்பாற்பட்டு மக்களின் நலன் காக்கின்ற நல்லதொரு ஆட்சியாக நடத்தி வருகிறார். இதுபோன்ற இடையூறுகள்,  தடைகளை எல்லாம் படிக்கட்டுகளாக்கி, தமிழகத்தை இந்திய திருநாட்டின் முதன்மையான மாநிலம் ஆக்கிட வேண்டுமென முதலமைச்சர் உறுதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை மண்டல இணை ஆணையர் ந.தனபால், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் வி.கே.மூர்த்தி, மாநகராட்சி உறுப்பினர்கள் திருமதி நாகவள்ளி, ராஜகோபால் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை