திருக்குறள் முற்றோதல் செய்த மாணவர்களுக்கு ரூ.1.20 லட்சம் காசோலை

திருச்சி, செப். 6: திருச்சி மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் செய்த மாணவர்களுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள காசோலைகளை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறையில் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப்பரிசு எனும் திட்டத்தின் கீழ் உலகப்பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்க செய்யும் வகையில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,000 வீதம் பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 2021-2022ம் ஆண்டில் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு 2022ம் ஆண்டு ஜனவரி 7 அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திறனறிக்குழுவின் முன்னிலையில் திருக்குறள் முற்றோதல் நேராய்வு நடைபெற்றது. திறனறிக்குழு நேராய்வின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுக்கு பரிந்துரைப்பட்டனர்.

அதில் தனியார் பள்ளியை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி ஷிவானி, மாணவன் திவிஷ், சிறுகாம்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயின்ற அகத்தீஸ்வரி, பொன்மலை புனித சிலுவை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்ற கேத்ரின் ரோஸ், பொன்மலை, புனித சிலுவை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்ற காவியா, சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயின்ற கவுசல்யா, வினோதினி, வர்ஷினி ஆகியோருக்கு தலா ரூ.15,000 வீதம் காசோலைகள், தமிழக முதலமைச்சர் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் அரசாணைகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று வழங்கினார். மேலும் திருச்சி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று வரும் தமிழறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை பெறுவதற்கு ஏதுவாக உரிய அரசாணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்