Wednesday, July 3, 2024
Home » திருக்குறளில் படமெடுக்கும் நாகம்!

திருக்குறளில் படமெடுக்கும் நாகம்!

by kannappan
Published: Last Updated on

குறளின் குரல்-112உலகெங்கும் நாகங்கள் தென்படுகின்றன. நஞ்சுள்ள நாகங்கள், நஞ்சில்லாத நாகங்கள் எனப் பாம்புகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. திருக்குறளிலும் பாம்பு மூன்று குறள்களில் ஊர்ந்து வருகிறது. பொருட்பாலில் இரண்டு இடங்களிலும் காமத்துப் பாலில் ஓர் இடத்திலும் நாகத்தைப் பற்றிப் பேசுகிறது வள்ளுவம்.`ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும்.’(குறள் எண் 763)எலி, வீடுகளிலும் வயல்களிலும் வாழும் ஓர் எளிய உயிரினம். எலிக்குப் பாம்பு பகை. ஆனால் பாம்பை விரட்டுவதாக எண்ணி எலிகள் கூட்டம் கூட்டமாகக் கூடி ஒலி எழுப்பி ஆரவாரம் செய்தாலும் என்ன பயன்? பாம்பு மூச்சு விட்டால் போதும். எலிகள் அஞ்சி இறக்க வேண்டியதுதான்.படை மாட்சி என்ற அதிகாரத்தில் இந்தச் செய்தியைப் பிறிது மொழிதல் அணியாகச் சொல்லி, வேறொன்றை உணர்த்தப் பயன்படுத்துகிறார், வள்ளுவர்.மிகுந்த வலிமையுடைய எதிரியின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. தன் வலிமை குறைவு என்கிறபோது அதை உணர்ந்து எதிரியிடமிருந்து ஒதுங்கிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்கிறது வள்ளுவம்.`உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடனுறைந் தற்று.’(குறள் எண் 890)உட்பகை என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் இடம் பெற்றுள்ளது. மனப்பொருத்தம் இல்லாதவர்களோடு கூடிவாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் ஒருவன் பாம்போடு வாழ்வதைப் போன்றது. எனவே, மாறுபட்ட கருத்துடையோர் அருகில் இருந்தால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.கண்டது மன்னும் ஒருநாள்அலர்மன்னும் திங்களைப்  பாம்புகொண்டற்று.(குறள் எண் 1146)காமத்துப் பாலில் `அலர் அறிவுறுத்தல்’ என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள் இது. காதலரைக் கண்டதென்னவோ ஒரே ஒருநாள் தான். ஆனால், அதற்குள் அதுபற்றிய வம்புப் பேச்சு (அலர்) திங்களைப் பாம்பு கொண்ட செய்திபோல் எங்கும் பரவிவிட்டது என்று அங்கலாய்க்கிறாள் தலைவி.நம் ஆன்மிகத்தில் பாம்பிற்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. குண்டலினி சக்தி முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் பாம்புபோல் சுருண்டு கிடப்பதாகவும் சாதகர்கள் அதை விழிப்படையச் செய்வதன் மூலம் ஆன்மிக முன்னேற்றங்களை அடைய முடியும் என்றும் நம் ஆன்மிக மரபு சொல்கிறது.குண்டலினியைப் படுத்திருக்கும் பாம்புடன் உவமிக்கிறார்கள். அது ஆன்மிக விழிப்பு  பெறும்போது பல அரிய ஸித்திகள் உண்டாவதாகச் சொல்லப்படுகிறது. `சீதக் களப செந்தாமரைப் பூ’  எனத் தொடங்கும் அவ்வையாரின் விநாயகர் அகவல் யோக நெறி பற்றி விவரிக்கிறது.`இடை பிங்கலையின் எழுத்தறிவித்துக்கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டிமூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி’என்ற வரிகளில் குண்டலினி சக்தி பாம்பின் வடிவில் அமைந்திருப்பது சொல்லப்படுகிறது.சைவம் வைணவம் ஆகிய இரண்டு சமயப் பிரிவுகளிலும் பாம்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சிவன் கழுத்தில் பாம்புகள் புரள்கின்றன. சிவனை நாகாபரணன் எனப் போற்றுகிறார்கள். நாகங்களையே அணிகலனாக அணிந்து கொண்ட கடவுள் சிவபெருமான்.அமிர்தம் வேண்டிப் பாற்கடல் கடையப்பட்டபோது மந்தர மலை மத்தாகியது. வாசுகி என்ற பெரிய பாம்புதான் மத்தைச் சுற்றிக் கடையும் கயிறாகியது. `வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி’ என்று இந்தக் காட்சியைச் சித்திரிக்கிறது சிலப்பதிகாரம்.அப்படிக் கடையும்போது பாற்கடலிலிருந்து கடுமையான நஞ்சு வெளிப்பட்டது. அந்த நஞ்சை அருந்தி தேவர்களைக் காத்தார் சிவன். அப்போது அந்தக் கொடும் நஞ்சு தன் கணவரை பாதித்துவிடாமல் இருக்க வேண்டுமே எனக் கவலை கொண்டாள் சிவனின் மனைவி பார்வதி. நஞ்சு கழுத்திலிருந்து உடலுக்குள் இறங்குவதற்குள் சிவனின் கழுத்தைப் பிடித்தாள். கணவனைக் கைப்பிடித்தவள், கணவனின் கழுத்தைப் பிடித்ததும் நஞ்சு உடலுக்குள் புகாமல் கட்டுப்பட்டுக் கழுத்திலேயே (கண்டத்திலேயே) நின்றுவிட்டது. சிவபெருமான் விஷத்தைக் கழுத்தில் நிறுத்தியதால் நஞ்சுண்ட கண்டன் எனப் போற்றப்படுகிறார்.வைணவத்தில் பாம்பணை மேல் துயில்கிறான் பரந்தாமன். ஆதிசேஷன் என்கிற நாகமே திருமாலின் படுக்கையாகிறது. திருமால் அவதாரம் எடுக்கும் தருணங்களில் எல்லாம் அவரது படுக்கையான ஆதிசேஷனும் அவதாரம் எடுப்பதைப் புராணங்களில் காணலாம்.ராமாவதாரத்தில் ராமபிரானின் தம்பி லட்சுமணனாக அவதரித்தது ஆதிசேஷன்தான். லட்சுமணன் ஆதிசேஷனின் அவதாரம் என்பதால்தான் அவனால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையும் சூர்ப்பணகையின் மூக்கை அறுத்தான் என்பதையும் ராமாயணம் பேசுகிறது. அதே திருமால் கண்ணனாக அவதரித்தபோது, கண்ணனுக்கு அண்ணனான பலராமனாக அவதரித்ததும் ஆதிசேஷனே. பாகவத புராணத்தின் இறுதியில் பலராமர் யோகத்தில் ஆழ்ந்தபோது அவர் ஒரு பாம்பாய் உருமாறி ஊர்ந்து நதியில் கலந்து சித்தி அடைந்ததாக செய்தி இடம்பெற்றுள்ளது.இந்த பூமியைத் தாங்குவதும் ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷ நாகம்தான் எனச் சொல்லப்படுகிறது.ராமாயணம் மகாபாரதம் ஆகிய இருபெரும் இதிகாசங்களிலும் நாகத்தை உள்ளடக்கிய நாகாஸ்திரம் ஒரு முக்கியமான படைக் கருவியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.ராமாயணத்தில் இந்திரஜித் லட்சுமணன் மேல் நாகாஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான். அதனால் லட்சுமணன் மயங்கி விழுகிறான்.மகாபாரதத்தில் நாகாஸ்திரம் கர்ணனின் முக்கியமான ஆயுதமாக இருக்கிறது. அதை அர்ஜுனனை நோக்கி ஒரே ஒருமுறை மட்டுமே பிரயோகிக்க வேண்டும் எனக் கர்ணனிடம் குந்தி வரம் வாங்குகிறாள்.கண்ணன் கதையைச் சொல்லும் பாகவதத்திலும் ஒரு புகழ்பெற்ற பாம்பு வருகிறது. காளிங்கன் என்ற அந்தக் கொடிய விஷமுள்ள பாம்பைக் கண்ணன் அடக்குகிறான். காளிங்கன் மேல் ஏறி நர்த்தனம் செய்கிறான் கண்ணன். நாராயண பட்டதிரி எழுதிய நாராயணீயத்தின் ஐம்பத்தைந்தாவது தசகம் முழுவதும் பத்து ஸ்லோகங்களில் கண்ணனின் காளிய மர்த்தன நடனத்தை விவரிக்கிறது.`பாம்புத் தலைமேலே நடம்செயும்பாதத்தினைப் புகழ்வோம்!மாம்பழ வாயினிலே குழலிசைவண்மை புகழ்ந்திடுவோம்!’என்பன, கண்ணனின் நடனம் பற்றிய மகாகவி பாரதியின் நயமான வரிகள். நாகலோகம் பற்றியும் நாக கன்னிகை பற்றியும் நம் புராணங்கள் பேசுகின்றன.சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில், கீரி பாம்பு பற்றிய கதையொன்று இடம் பெற்றுள்ளது. ஒரு பெண் தன் வீட்டில் கீரி வளர்த்து வந்தாள். அவள் தண்ணீர் பிடிக்கப் போனபோது ஒரு பாம்பு அவளுடைய குழந்தையைத் தீண்ட வந்தது. நன்றியுள்ள கீரி சீறிப் பாய்ந்து அந்தப் பாம்பைக் கொத்திக் குதறிக் கொன்றது. பின் வாயில் வழியும் குருதியோடும் பெருமிதத்தோடும் வீட்டு வாயிலில் குழந்தையின் தாயின் வருகைக்காகக் காத்திருந்தது.குடத்தில் தண்ணீரோடு தாய் வந்தாள். வாயில் குருதியோடு நின்றிருந்த கீரியைப் பார்த்ததும் பதைபதைத்தாள். அந்தக் கீரி தன் குழந்தையைக் கொன்றிருக்க வேண்டும் என்று அவசரத்தில் தவறாக முடிவுகட்டினாள். தண்ணீர்க்குடத்தை அந்தக் கீரியின் தலையில்போட்டு, தன் குழந்தையைக் காப்பாற்றிய கீரியைக் கொன்றுவிட்டாள் அவள்.தன் குற்றத்தால் வருந்திய அந்தப் பெண்ணின் பாவம் தீரப் பல தான தர்மங்கள் செய்ய வேண்டியிருந்தது என்றும், அதற்குப் பெரும்பொருள் கொடுத்து உதவியவன் கோவலன் என்றும் மாடலமறையோன் என்ற பாத்திரம் சொல்வதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.  பாம்பாட்டிச் சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். பாம்புகளைக் கையாளும் வல்லமை பெற்றவர் அவர் என்பதால் அப்பெயர் பெற்றார். யோகநெறியில் குண்டலினியைப் பாம்பு என்ற குறியீட்டால் குறிப்பிடுவதால், இவர் குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதாலும் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்கிறார்கள்.மனம் என்னும் பாம்பை அடக்கி ஆளவேண்டும் என்ற கருத்தில் இவர் பல அழகான பாடல்களை இயற்றியுள்ளார். தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோல் மனத்துக்குள் இருக்கும் பாம்புக்குப் பல அறிவுரைகளைச் சொல்வதாக அவரது பாடல்கள் அமைந்துள்ளன.`இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ணஈரைந்து மாதமாய் வைத்த சூளைஅருமையாய் இருப்பினும் அந்தச் சூளைஅரைக்காசுக் காகாதென்று ஆடுபாம்பே!’என்பது அவரது அழகிய கவிதைகளில் ஒன்று.பாம்புப் புற்றுக்குப் பால் வார்க்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. நாகாத்தம்மன் என்று நாகத்தையே ஓர் அம்மனாகக் கருதிக் கும்பிடும் மரபும் நம்மிடம் உண்டு. அரச மரத்தடியில் கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து அந்த நாகக் கடவுளை வணங்கும் மரபும் நம்முடையதுதான்.  மகுடி இசைக்குப் பாம்பு மயங்கும் என்ற கருத்து சொல்லப்படுகிறது. பாம்பைப் பிடிக்கும் பாம்புப் பிடாரர்கள் மகுடி ஊதிப் பாம்பை மயங்கச் செய்து பிடிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் மகுடி இசைக்கெல்லாம் பாம்பு மயங்காது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.பாம்புகள் அபாரமான ஞாபகசக்தி உடையவை என்றும் அவை பழிவாங்கும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.  அந்தக் கருத்தை மையமாக வைத்துத் தமிழில் `நீயா’ என்ற தலைப்பில் ஒரு திரைப்படமே வந்தது. ஆனால் பாம்புகள் பழிவாங்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகத் தெரியவில்லை.பாம்பைப் பற்றிய கண்ணதாசன் கவிதை ஒன்று திருவருட்செல்வர் திரைப்படத்தில் டி.எம். சௌந்தரராஜன் குரலில் ஒலித்துப் பல ரசிகர்களைக் கவர்ந்தது.`நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே – உனக்குநல்லபெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே!ஆதிசிவன் தலையமர்ந்த ஆணவமா? – அவன்அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா?ஊர்கொடுத்த பால் குடித்து உயிர்வளர்த்தாய் – பால்உண்டசுவை மாறுமுன்னே நன்றி மறந்தாய்!வஞ்சமற்ற தொண்டனுக்கே வஞ்சனை செய்தாய் – அவர்பிஞ்சுமகன் நெஞ்சினுக்கே நஞ்சுகொடுத்தாய்!பெயருக்குத் தகுந்தாற்போல் மாறிவிடு – எங்கள்பிள்ளையை மறுபடியும் வாழவிடு!’பாம்பின் மூலம் கருத்தைச் சொல்லிக் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடல்,  `சூரியகாந்தி’ திரைப்படத்தில் ஒலித்தது. கண்ணதாசனே பாடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டது. கருத்துள்ள அந்தப் பாடலும் திரைத்துறையில் அழியாப் புகழைப் பெற்றுவிட்டது.`பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமேகருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது…உயர்ந்த இடத்தில் இருக்கும்போதுஉலகம் உன்னை மதிக்கும் – உன்நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்நிழலும் கூட மிதிக்கும்மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றுமானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னதுஅவ்வை சொன்னது அதில் அர்த்தமுள்ளது…’மகரிஷி ரமணர் தங்கி யிருந்த குகையில் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. அதை அடிக்கப் போனார்கள் அடியவர்கள். ஸ்ரீரமணர் அவர்களைத் தடுத்தார். `என்ன செய்கிறீர்கள்?’ என வினவினார். `நாம் குடியிருக்கும் இடத்தில் பாம்பு வந்து விட்டதே?’ என்றார்கள் அடியவர்கள். ரமணர் நகைத்தவாறே சொன்னார்:`குகை பாம்பு குடியிருக்கும் இடம். அது குடியிருக்கும் இடத்திற்கல்லவா நாம் வந்திருக்கிறோம். பாம்பை ஒன்றும் செய்யாதீர்கள். அது தானாகப் போய்விடும்!பம்பாயில் கச்சேரி செய்யச் சென்றார் செம்மங்குடி சீனிவாசய்யர். காஞ்சி காமாட்சியைப் பற்றிப் பாடும்போது காஞ்சியைப் பற்றிப் பாடினார். மதுரை மீனாட்சியைப் பற்றிப் பாடும்போது மதுரையைப் பற்றிய வரிகள் அந்தப் பாடலில் இடம்பெற்றன. காசி விசாலாட்சி பற்றிய கீர்த்தனையில் காசியின் பெருமை பேசப்பட்டது.இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்த பம்பாய் ரசிகர் ஒருவருக்கு ஓர் ஆதங்கம். இத்தனை ஊர்களைப் பற்றிப் பாடுபவர் தங்கள் பம்பாய் நகரைப் பற்றி எந்தப் பாட்டும் பாடவில்லையே? `எங்கள் பம்பாயைப் பற்றியும் ஒரு பாட்டுப் பாடுங்கள்` எனக் கேட்டுக் கொண்டார் அவர்.யோசித்தார் செம்மங்குடி. பம்பாய் நகரைப் பற்றி எந்தப் பழைய கீர்த்தனையும் கிடையாது. அது புதிதாய் வந்த நகரம். அதனால் என்ன? அந்த அன்பரின் வேண்டுகோளைப் பூர்த்தி செய்வது என முடிவு செய்தார். அவர் பாடிய அந்தப் பாடலைக் கேட்டு அன்பரும் மகிழ்ந்து சிரித்தார். சற்றே அழுத்தமான உச்சரிப்புக் கொடுத்து செம்மங்குடி பாடிய அந்தப் பாடல் எது தெரியுமா?  `ஆடு பாம்பே! விளையாடு பாம்பே!`(குறள் உரைக்கும்)திருப்பூர் கிருஷ்ணன்

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi