திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓ, மேலாளர் உள்பட அலுவலர்கள் பற்றாக்குறையால் மக்கள் பணி பாதிப்பு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருக்கழுக்குன்றம், செப்.13: திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓ, மேலாளர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் பற்றாக்குறையால், மக்கள் நல பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, உடனடியாக புதியதாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் மொத்தம் 54 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த, ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுமக்கள் சார்ந்த திட்டப்பணிகளை வரையறுப்பது, மாவட்ட நிர்வாகத்திடம் நிதி கோருவது, திட்ட மதிப்பீடு தயார் செய்வது, ஊராட்சிகளின் தேவைக்கேற்ப நிதி ஒதுக்குவது, அதை செயல்படுத்துவது, அப்பணிகளை மேற்பார்வையிட்டு உரிய ஆய்வு செய்வது, ஒன்றிய அளவிலான பொதுமக்கள் அன்றாடம் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய வேண்டியுள்ளது.

இந்த திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கடந்த பல மாதங்களாக வட்டார வளர்ச்சி அலுவலர், மேலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இல்லாமலும், போதிய பணியாளர்கள் இல்லாமல் இயங்கி வருகிறது. இதனால், மக்கள் நலத்திட்ட பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்டவை பாதிக்கப்படுவதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இருக்கின்ற அலுவலர் மற்றும் குறைந்த அளவிலான பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் மூலம் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டியநிலை உள்ளது. இதனால், அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி மற்றும் ஊழியர்கள் பெரும் பணி சுமைக்குக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால், அவரவர்கள் வேறு இடத்திற்கு மாறுதல் வாங்கிக்கொண்டு ஓடி விடலாமா என்று யோசிப்பதாக கூறப்படுகின்ற நிலையில், உடனடியாக மாவட்ட நிர்வாகத்தினர் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி பணிகள் தொய்வடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உள்ளாட்சி பிரதிநிதிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், ‘ஏற்கெனவே இங்கு சிறிது காலமே பணியில் இருந்த (வட்டார ஊராட்சி) வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மேலாளர் உள்ளிட்ட முதன்மை பொறுப்புகளில் உள்ளவர்கள் முதல் அலுவலக உதவியாளர் வரை பெரும்பாலானவர்களை மாவட்ட நிர்வாகத்தில் உள்ள ஒரு முக்கிய பெண் உயரதிகாரி அவரது அலுவலக நிர்வாகத்திற்கு மாற்றுப்பணி மற்றும் பணி மாறுதல் என்ற பெயரில் அழைத்துக்கொண்டார்.

தற்போது, உள்ள (கிராம ஊராட்சி) வட்டார வளர்ச்சி அலுவலரே, இரு வட்டார வளர்ச்சி அலுவலர் செய்ய வேண்டிய வேலையை பார்ப்பதால், அவர் மிகுந்த பணிச்சுமைக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நிர்வகிப்பதற்கு முக்கிய பதவியே வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மேலாளர் தான். ஆனால், அவர்களது பணியிடமே காலியாக இருந்தால், அடுத்த கட்டநிலையில் வேலைப் பார்ப்பவர்களை யார் கண்காணிப்பது? நிர்வகிப்பது இதையெல்லாம் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் நேரில் வந்து கள ஆய்வு செய்து, காலியாக உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மேலாளர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர்கள், வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிட வேண்டும்’ என்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி