திரளான பக்தர்கள் தரிசனம் கலசபாக்கத்தில் பிரசித்தி பெற்ற திருமாமுடீஸ்வரர் கோயிலில்

 

கலசபாக்கம், ஏப்.27: கலசபாக்கத்தில் பிரசித்தி பெற்ற திருமாமுடீஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம். கலசபாக்கத்தில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பிரமோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை நடை திறக்கப்பட்டு திருமாமுடீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், இளநீர், தேன் உள்பட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து உற்சவமூர்த்திகள் விநாயகர், திருமாமுடீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதையடுத்து 7 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் பிரமோற்சவ கொடி ஏற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நேற்று இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், திருமாமுடீஸ்வரர், திரிபுரசுந்தரி, சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதேபோல் தினமும் பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறும். பிரமோற்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 2ம் தேதி நடைபெறுகிறது. இதை யடுத்து வரும் 5ம் தேதி கொடியிறக்கம் மற்றும் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது.

ஊர் கூடி தேர் இழுக்க ஆசை
கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோயிலில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 7ம் நாள் நடைபெறுவது வழக்கம். கோயிலுக்கென சொந்தமாக தேர் இல்லாத காரணத்தால் திருமா முடீஸ்வரர் இளைஞர் பேரவை சார்பில் மூங்கிலால் செய்யப்பட்ட தேரில் உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கென சொந்தமாக தேர் செய்து தர வேண்டும் என பல ஆண்டு காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, சொந்தமாக தேர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்ற ஆசை விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி