திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது-இருமாநில போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் : திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் இருமாநில போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. அதிவேகமாக செல்லும் வாகனங்களால் வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழப்பதால் கடந்த பிப்ரவரி 10ம் தேதி முதல் இச்சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து கல் பாரம் ஏற்றி வந்த 12 சக்கரம் கொண்ட சரக்கு லாரி திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்றதால் தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி பழுது காரணமாக திம்பம் மலைப்பாதை மற்றும் பண்ணாரி சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஏற்கனவே, இரவு நேர வாகன போக்குவரத்து தடையால் இரு மாநிலங்களுக்கிடையே சரக்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை 11 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பல மணி நேரம் வனப்பகுதியில் உள்ள மலைப்பாதையில் காத்திருந்த வாகன ஓட்டிகள் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.எடை மேடை என்னாச்சு?: திம்பம் மலைப் பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் பழுது ஏற்பட்டு நின்று விடுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 2019ம் ஆண்டு ஈரோடு கலெக்டர் உத்தரவின் பேரில் வனத்துறை சார்பில் பண்ணாரி அருகே உள்ள புதுவடவள்ளி பகுதியில் ஒரு எடை மேடையும், ஆசனூர் பகுதியில் ஒரு எடை மேடையும் என இரண்டு எடை மேடைகள் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டது.அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் இந்த எடை மேடையில் எடை அளவு பரிசோதிக்கப்பட்டு  மலைப்பாதையில் அனுமதிப்பதற்காக அமைக்கப்பட்டது. புதிய எடை மேடைகள் அமைக்கப்பட்டு ஓரிரு நாட்கள் மட்டுமே சோதனை அடிப்படையில் சரக்கு லாரிகள் எடை மேடையில் எடை அளவு சரிபார்க்கப்பட்டது. அதன்பின், இரு எடை மேடைகளிலும் சரக்கு லாரிகளை எடை அளவு பார்க்காமல் கிடப்பில் போடப்பட்டது. எடைமேடைகள் செயல்பாட்டில் இல்லாததால் இது போன்று அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். எடை மேடைகளை சீரமைத்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!