திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ் தலைவர்): திமுகவின் தலைவராக கலைஞர் பொறுப்பேற்று வளர்த்த இயக்கத்தை அவரது மறைவிற்குப் பிறகு சிந்தாமல், சிதறாமல் கட்டுக் கோப்புடன் கம்பீரமாக வழிநடத்தி வரும் மு.க.ஸ்டாலின் மிகுந்த பாராட்டுதலுக்குரியவர், போற்றுதலுக்குரியவர். தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் அவரை மனதார வாழ்த்துகிறேன். பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி மற்றும் பலர் பொறுப்பேற்றிருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன். ராமதாஸ்(பாமக நிறுவனர்):திமுகவின் தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள். தந்தையைப் போல கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்லவும்  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வைகோ(மதிமுக பொது செயலாளர்):திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாநிலமாக நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். பிற நாடுகளின் அரசுகளும் திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றுகிற காலம் வெகு தூரத்தில் இல்லை. மேலும் பல்லாண்டு காலம் திமுகவின் தலைவராக வழிநடத்திச் செல்ல வேண்டி விழைகிறேன்.கி.வீரமணி(திக தலைவர்): முப்பெரும் தலைவர்களின் அறிவுரையை கட்டளையாக்கி, திமுகவை நடத்தி, வெற்றி வாகை சூடி ‘திராவிட மாடல்’ ஆட்சியை – மாட்சியை உலகம் வியக்க நடத்த, ‘‘ஒளிபடைத்த கண்ணினாய்’’ வா, வா! என்று அரவணைத்து வரவேற்கிறோம். முத்தரசன்(சிபிஐ மாநில செயலாளர்): வகுப்புவாத, மதவெறி, சாதிவெறி, சனாதான பழைமைவாத சக்திகளிடமிருந்தும், பன்னாட்டு கார்ப்ரேட் சக்திகளின்நிதிமூலதன ஆக்டோபஸ் கரங்களிலிருந்தும் இந்திய ஒன்றியத்தை மீட்டு பாதுகாக்க, மதச் சார்பற்ற, சமூகநீதி சார்ந்த ஜனநாயக மாற்றை கட்டமைத்து, வெற்றி காண விழைந்து, இரண்டாம் முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  கே.பாலகிருஷ்ணன்(சிபிஎம்): மதச்சார்பின்மை மற்றும் மதநல்லிணக்கததை பாதுகாக்க முனைப்பாக செயலாற்றுவதோடு, மத்திய பாஜ அரசின் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். ஜவாஹிருல்லா(மமக தலைவர்): கலைஞர் வழி நின்று திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கவும் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கவும் சளைக்காமல் உழைத்து வரும் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக 2வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: இரண்டாவது முறையாக திமுக தலைவராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். பணி சிறக்கட்டும். நெல்லை முபாரக்(எஸ்.டி.ஐ.பி.தலைவர்): திமுக தலைவராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினின் பணி சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். திமுகவின் அனைத்து தலைமைக் கழக தலைவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அபுபக்கர்(இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்): தமிழகத்தின் முதல்வராக அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை பெற்று, நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் என்ற பொறுப்பை 2வது முறையாக அடைந்திருப்பது மட்டற்ற மகிழ்சி. உழைப்பு, உழைப்பு, உழைப்பு அதுவே மு.க.ஸ்டாலின் என்று தந்தை சொன்ன வாக்கியத்தை வாழ்க்கையாய் மாற்றி காட்டிய அவரது பயணம் இன்னும் பல்லாண்டு தொடர வேண்டும்.ரெ.தங்கம்(தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க தலைவர்):  2வது முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு  மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பாக வாழ்த்துகளை  தெரிவித்துக்கொள்கிறோம். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை