Wednesday, July 3, 2024
Home » திமுக ஆட்சிக்கு வந்ததும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: நெல்லை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்ததும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: நெல்லை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

by kannappan

நெல்லை: திமுக ஆட்சிக்கு வந்ததும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் நெல்லை பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். நெல்லை மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் அம்பை ஆவுடையப்பன், பாளை. அப்துல்வகாப், ராதாபுரம் அப்பாவு, நெல்லை ஏஎல்எஸ் ெலட்சுமணன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்திலும் ஆதரவு கேட்டு நெல்லை டவுன் வாகையடி முனையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  தமிழக முதல்வர் பழனிசாமி, அவர் எப்படி தவழ்ந்து, ஊர்ந்து முதல்வர் ஆனார் என்பதை நான் சொன்னால், அவருக்கு என் மீது கோபம் வருகிறது. சசிகலாவால் நான் முதல்வராகவில்லை. எம்எல்ஏக்கள் ஒன்று கூடி என்னை முதல்வராக்கினர் என்கிறார். அப்படியென்றால் நீங்கள் ஊர்ந்தது, தவழ்ந்தது எல்லாம் உண்மையில்லையா?. முதல்வர் பழனிசாமி இப்போது ‘‘நான் பாம்பா? அல்லது பல்லியா? ஊர்ந்து செல்ல’’ என கேள்வி எழுப்புகிறார். நீங்கள் விஷப்பாம்பு, விஷபல்லி என்பதை இங்குள்ள மக்களே கூறுகின்றனர். துரோகமே பெரிய விஷமாகும். சசிகலாவுக்கு துரோகம் செய்தது யார்? சசிகலாவுக்கு துரோகம் செய்த பழனிசாமி இப்போது அதிமுகவுக்கும் துரோகம் செய்து வருகிறார். தமிழகத்தில் பாஜவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது. டெல்லியில் எடுக்கிற முடிவுகளை தமிழகத்தில் செயல்படுத்தி, ஒரு அக்கிரமமான ஆட்சியை பழனிசாமி நடத்தியுள்ளார். இன்று விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டு நிற்கிறது. மத்திய, மாநில அரசுகள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடையில் தேவையில்லாத பொருட்கள் மக்கள் தலையில் திணிக்கப்படுவதாக ஊழியர்கள் சங்கங்களே தெரிவிக்கின்றன.மக்களை குழப்பி ஸ்டாலின் வெற்றி பெற நினைக்கிறார் என பழனிசாமி குற்றம்சாட்டுகிறார். மக்கள் ஒருபோதும் குழம்ப மாட்டார்கள். பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்புவதில் மக்கள் தெளிவாக உள்ளனர். திமுகவை ஆட்சியில் அமர்த்தவும் மக்கள் தயாராகிவிட்டனர். அதற்கு இங்குள்ள வேட்பாளர்களின் வெற்றி அவசியம். நானும் ஒரு வேட்பாளர் தான். முதல்வர் வேட்பாளர். அதிமுகவை விரட்டுவது மட்டுமல்ல நமது நோக்கம். பாஜவையும் இந்த மண்ணில் அண்ட விடக்கூடாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் பயிற்றுவித்த மண். எனவே மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்து தொகுதிகள் தோறும் நான் மனுக்கள் வாங்கினேன். அதற்கு ஆட்சிக்கு வந்து 100 நாளில் எந்த பிரச்னையை தீர்க்க முடியும் என பழனிசாமி கேள்வி எழுப்புகிறார். குடிநீர், கழிவறை, பள்ளிகள், மருத்துவம், ஓய்வூதியம், 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்டவற்றில் காணப்படும் அடிப்படை பிரச்னைகளை 100 நாட்களில் சரி செய்ய முடியாதா என்ன? இதற்காக நாங்கள் பெற்ற மனுக்களுக்கு அடையாள அட்டை கொடுத்துள்ளோம். அந்த அட்டையை எடுத்து கொண்டு கோட்டைக்கு பொதுமக்கள் வரலாம் என்றேன். அது எப்படி முடியும் என்கிறார் பழனிசாமி? கலெக்‌ஷன், கரப்ஷன் என ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் உங்களால் அது முடியாது.நான் ஒரு விஷயத்தை ஆதாரத்தோடு சொல்கிறேன். கடந்த 2006ம் ஆண்டு கலைஞர் தேர்தல் அறிக்கையில், ‘‘கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’’ என்றார். எங்களுக்கே அதுகுறித்து சந்தேகம் வந்தது. ₹7 ஆயிரம் கோடி கடனை எப்படி தள்ளுபடி செய்ய முடியும் என நினைத்தோம். ஆனால் அவர் நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்றபோது, அதற்கான கோப்புகளை அங்கு வரவழைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார். திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலர் டிவியை தானே இன்றும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர் எல்லாம் இப்போது காயலாங்கடையில் தான் இருக்கின்றன.எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் மின்கட்டணத்தில் ஒரு பைசா குறைக்க விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஆனால் 1989ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் இலவச மின்சாரம் அறிவித்து விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். கலைஞரை பொருத்தவரை சொன்னதை தான் செய்வார், செய்வதைத் தான் சொல்வார். அவரது வழியை பின்பற்றி நடக்கும் நானும் உண்மையான வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பேன். பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்கியது திமுக. உள்ளாட்சியில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கினோம். கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை, ஏழை பெண்களுக்கு திருமண உதவி தொகை என எத்தனையோ திட்டங்களை வழங்கியது திமுக. திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை ₹5 குறைப்பு, சிலிண்டருக்கு ₹100 மானியம், பால் விலை ₹3 குறைப்பு, அரசு காலி பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.  தமிழகத்தை பொருத்தவரை இனிமேல் மோடி மஸ்தான் வேலைகள் பலிக்காது. டெல்லியில் இருந்து நம்மை மிரட்டுகின்றனர். அடித்த கொள்ளையில் இருந்து தப்பிக்க இங்குள்ள ஆட்சியாளர்கள் அதற்கு ‘‘ஆமாம் சாமி’’ போடுகின்றனர். எனவே வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல், சுயமரியாதையை நாம் மீட்டெடுக்க வேண்டிய தேர்தல். வேலைவாய்ப்பு பெருகிட, மாநில உரிமையை மீட்டெடுக்க, நெல்லை சீமையை பாதுகாக்க வாக்காளர்கள் அனைவரும் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். குமரி மாவட்டம் தக்கலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின் போது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் என்று அறிவித்தார். ஆனால் நான், அந்த பகுதிக்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு சென்ற போது, அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற உதயகுமார், முகிலன், புஷ்பராஜ் ஆகியோர் மீதான தேச துரோக வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை என என்னிடம் தெரிவித்தனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த தேசதுரோக வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றார்.தனது வருவாயை பெருக்கிக் கொண்ட வருவாய்த்துறை அமைச்சர்மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மதுரைக்கு எவ்வளவோ சிறப்புகள் உள்ளது. அசிங்கங்களும் உள்ளன. அசிங்கத்தின் அடையாளமே செல்லூர் ராஜூ, உதயகுமார், இன்னொருவரும் இருக்கிறார். அவர்தான் ராஜன் செல்லப்பா. 3 பேருக்கும் கோஷ்டி தகராறு. அதனால்தான் மதுரையில் வளர்ச்சி இல்லை. செல்லூர் ராஜூ காமெடி பீஸ். உதயகுமார் கிரிமினல் அமைச்சர். எப்படி என்றால், ஜெயலலிதாவே உதயகுமார் பதவியை பறித்தார். பிறகு சின்னம்மாவிடம் கேட்டு மீண்டும் பதவி வாங்கினார். ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தார். பிறகு ஓபிஎஸ்சுக்கு  துரோகம் செய்து சின்னம்மாதான் முதல்வர் என்றார். சின்னம்மா ஜெயிலுக்கு போனதும் எடப்பாடி பக்கம் வந்து விட்டார். எவ்வளவு துரோகம். அவர் சிஎம் ஆனார். இவர் வருவாய்த்துறை அமைச்சராகி, தனது வருவாயை பெருக்கிக் கொண்டார். மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றார்.திமுக ஆட்சியில் 1.90 லட்சம் ஏக்கர் நிலம் ஏழைகளுக்கு வழங்கப்பட்டதுநெல்லையில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘பழனிசாமி இன்னொரு அண்ட புளுகு, ஆகாச புளுகையும் மக்கள் மத்தியில் கூறி வருகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம் தருவோம் என அறிவித்தார்களே, தந்தார்களா என கேள்வி எழுப்புகிறார். எந்த நிலமும் கொடுக்கவில்லை என்கிறார். இது ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய். 2006ம் ஆண்டு ஆவணங்களை எடுத்து பார்த்தால் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 719 ஏக்கர் நிலம் நாங்கள் ஏழைகளுக்கு வழங்கியிருப்பது தெரிய வரும். தான் திருடி யாரையும் நம்ப மாட்டார் என்பது போல் பழனிசாமி பேசி வருகிறார் என்றார்.தமிழகத்தில் பாஜவின் கிளை அமைப்பாக அதிமுக மாறி விட்டது. டெல்லியில் எடுக்கிற முடிவுகளை தமிழகத்தில் செயல்படுத்தி, ஒரு அக்கிரமமான ஆட்சியை பழனிசாமி நடத்தியுள்ளார்…

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi