திமுகவை கட்டிக்காக்கும் பெரும்பணியில் இளைஞரணியின் உறுதிமிக்க செயல்பாடுகள் தொடர வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற உன்னத லட்சியத்தைக் கொண்ட இயக்கத்தை  கட்டிக்காக்கும் பெரும்பணியில் இளைஞரணி பட்டாளத்தின் உறுதிமிக்க  செயல்பாடுகள் தொடர வேண்டும் என்று தாயுள்ளத்தோடு வாழ்த்துகிறேன்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக இளைஞர் அணியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அதனை உதயநிதி சிறப்பாக முன்னெடுத்து வருவதைக் கண்டு தந்தையாக அல்லாமல், திமுகவின் தலைவராக மகிழ்கிறேன். காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ற வகையில் அதன் செயல்பாடுகள் தொடரவேண்டும் என விரும்புகிறேன். நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தல் களத்தில் உதயநிதியும் அவரது இளைஞரணிப் பட்டாளத்தினரும் ஆற்றிய முனைப்பான பணிகள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்குத் துணை நின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்ப்பு, நீட் விலக்குப் போராட்டம், கொரோனா கால நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் இளைஞரணியின் பங்களிப்பை ஒரு தாயின் உணர்வுடன் கவனித்து பெருமை கொண்டேன்.கலைஞரின் 99வது பிறந்த ஆண்டினையொட்டி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறைக்கு திராவிட இயக்கக் கொள்கைகளையும் சாதனைகளையும் சரியான முறையில் கொண்டு சேர்த்து, மதவாத அரசியல் சக்திகள் அந்த மண்ணில் ஊடுருவச் செய்யாமல் தடுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனே, வில்லில் இருந்து பாயும் கணையாக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்து, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் சிறப்பான கருத்தரங்கை நடத்தி, அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தொகுதியிலும் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.இத்தகைய வேகமும் இளைஞர்களிடம் இலட்சியத்தைக் கொண்டு சேர்க்கின்ற வியூகமும், எதையும் தாங்கும் இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்து தமிழ்நாட்டை உலகளவில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வற்குத் துணை நிற்கக்கூடியதாகும். இயக்கத்தைக் கட்டிக் காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞரணி தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.கலைஞர் நமக்கு ஐம்பெரும் முழக்கங்களைத் தந்திருக்கிறார். அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி-இதுதான் திராவிட மாடலின் இலக்கணம். அந்த இலக்கணத்தைக் கடைப்பிடித்து, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற உன்னத இலட்சியத்தைக் கொண்ட இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பெரும்பணியில் இளைஞரணிப் பட்டாளத்தின் உறுதிமிக்க செயல்பாடுகள் தொடர்ந்திட தாயுள்ளத்தோடு வாழ்த்துகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு