திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: தெற்கு மாவட்ட செயலாளர் பேச்சு

மதுக்கரை, டிச.16: கோவை தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் ஒத்தக்கால் மண்டபம் பேரூர் கழக திமுக நிர்வாகிகள் கூட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் விஜியசேகரன் தலைமை வகித்தார். அவை தலைவர் குப்புராஜ், பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி ராஜசேகரன், துணை செயலாளர்கள் செல்வி, நந்தகுமார், அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் சுறா சதீஷ்குமார் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் பேசியதாவது: இந்தியாவில் எந்த முதல்வர்களும் செய்ய முடியாத சாதனைகளை நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவிகளுக்கு கல்வி உரிமைத்தொகை, மாணவர்களுக்கு இலவச காலை உணவுத்திட்டம், மகளிர்களுக்கு மாதம் தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000, மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நாள்தோறும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

அதனால் மக்கள் மத்தியில் தமிழக முதல்வருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதுவே பாராளுமன்ற தேர்தலில் நமக்கு வெற்றியை தேடித்தரும். இதை தடுக்க வேண்டும் என்கிற நோக்கில் நமது கழக நிர்வாகிகளை அதிமுகவுக்கு இழுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அது ஒரு போதும் நடக்காது. காரணம் இது சுயமரியாதை வழிவந்த கொள்கை வீரர்கள் நிறைந்த இயக்கம், கடைசி தொண்டன் இருக்கும் வரை இதை யாராலும் வீழ்த்த முடியாது. அதனால் நமது வார்டு செயலாளர்கள் வீடு, வீடாக சென்று கழக அரசின் சாதனைகளை எடுத்து கூற வேண்டும். அந்த சாதனைகள் நமக்கு வெற்றியை தேடித்தரும் என்று பேசினார்.கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ரகு துரைராஜ், ஆட்சிப்பட்டி பாலு, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சல்மான் நாசர், புவணேஷ், ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் சீரபாளையம் செந்தில் குமார், மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை