தினமும் ₹50 ஆயிரம் லாபம் என கூறி செவிலியரிடம் ₹18 லட்சம் மோசடி

புதுச்சேரி, ஜூலை 3: புதுச்சேரியில் ஆன்லைனில் முதலீடு செய்தால் தினமும் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும் என கூறி செவிலியரை ரூ.18 லட்சம் முதலீடு செய்ய வைத்து மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கோகிலா (38). செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் தெரியாத நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த நபர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெறும் வகையில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், சிறிய முதலீடு செய்தால் ஒரு நாளைக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லாபம் வரும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பி அவரும் ஆன்லைனில் கணக்கு தொடங்கி 67 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.18 லட்சத்து 4 ஆயிரத்து 556ஐ முதலீடு செய்துள்ளார். பின்னர், முதலீடு செய்து சம்பாதித்த பணத்தை எடுக்க முயன்றபோது, மேலும் பணத்தை முதலீடு செய்யுமாறு மோசடி கும்பல் கூறியுள்ளது. அதன்பிறகே, அவர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். வைத்திக்குப்பத்தை சேர்ந்த ருபா கோஷ் என்பவரிடம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த நபர் ருபா கோஷின் அமெரிக்காவை சேர்ந்த முதலாளி போல் ஆள்மாற்றம் செய்து ரூ.50 ஆயிரத்தை ஏமாற்றி பெற்றுள்ளார். மூலக்குளத்தை சேர்ந்த சதீஷ் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து மோசடியாக ரூ.13,101 எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருபுவனையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கடன் செயலியில் பணம் பெற்றுள்ளார்.

அதனை உரிய தேதிக்குள் திரும்பி செலுத்தியுள்ளார். அதன் பிறகு, தெரியாத நபர் கார்த்திகேயனின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து
அவரும் ரூ.8 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். மணக்குப்பத்தை சேர்ந்த தாயம்மாள் என்பவருக்கு வங்கியில் இருந்து அனுப்பியது போல் ஒரு லிங்க் மெசேஜ் வந்துள்ளது. உடனே அவரும் லிங்க் வழியாக சென்று வங்கி சான்று, பயனாளர் ஐடி, கடவுச்சொல் உள்ளிட்டவற்றை பதிவு செய்துள்ளார். அதன் பிறகு, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5,900 மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய நபர்கள் உட்பட 5 பேர் ரூ.18.81 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்