திண்டுக்கல் மாவட்டத்தில் நவ.25, 26ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

திண்டுக்கல், நவ. 17: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் வரும் நவ.25, நவ.26ம் ஆகிய தேதிகளில் நடைபெறும் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் என 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 01.01.2024ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் கடந்த அக்.27ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் நவ.18ம் தேதி மற்றும் நவ.19ம் தேதி நடைபெற இருந்த வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படி வரும் நவ.25ம் தேதி மற்றும் நவ.26 தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெற்று கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்கள் மேற்கண்ட சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்து கொள்ளலாம். மேலும் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் செய்ய விரும்புவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை