திண்டுக்கல் அருகே மீண்டும் நில அதிர்வு: 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனூர் கிராமத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. சில வீடுகளில் ஓடுகள் உடைந்து சேதமடைந்தன. இதையடுத்து நடைபெற்ற ஆய்வில் கே.கீரனூரில் 1.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவானது தெரியவந்தது. இதன்பிறகு இரண்டு நாள் தொடர்ந்து லேசான சத்தங்களுடன் அதிர்வுகள் ஏற்பட்டு வந்தன. பின்னர் அதிர்வு நின்று போனது. நேற்று முன்தினம் இரவு சுமார் 10.50 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.இதனையடுத்து அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இதனிடையே கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று கே.கீரனூர் கிராமத்திற்கு வந்தனர். நில அதிர்வால் விரிசல் ஏற்பட்ட வீடுகளை ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் விசாகன் கூறுகையில், ‘‘மிகவும் சேதமடைந்த நபர்களுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டம் மூலமாக புதிதாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். லேசான விரிசல் ஏற்பட்டு உள்ளவர்களுக்கு சரி செய்து தரப்படும். நில அதிர்வு எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறியும் வரை மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்’’ என்றார்….

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை