திண்டுக்கல் அருகே மான் தோல், நரி பல் வைத்திருந்த ஜோதிடர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மான் தோல் மற்றும் மான் கொம்பு, நரி பல் வைத்திருந்த ஜோதிடரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து மான்தோல், நரி பல், ஆமை ஓடு உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் மான்தோல், மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர் திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் உள்ள ரெட்டியபட்டிக்கு சென்று வீடு வீடாக சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் மான்தோல், மான் கொம்பு, நரிபல், ஆமை ஓடு ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்தவரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர்.அவர், திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (46) என்பதும், ரெட்டியபட்டியில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஜோதிடம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. வனத்துறையினர் சுந்தரமூர்த்தியை கைது செய்து, அவவது வீட்டில் இருந்த 3 புள்ளிமான் தோல், 3 மான் கொம்பு, 6 நரி பல், 17 ஆமை ஓடு, 2 காட்டுப்பன்றி மண்டை ஓடு, 11 காட்டுப்பன்றி பல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மான்தோல் மற்றும் மான்கொம்பு உள்ளிட்டவைகள் சுந்தரமூர்த்திக்கு எப்படி கிடைத்தது, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

சாக்லேட் கொடுப்பதாக அழைத்து; 4ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்:ஹெச்எம் அதிரடி கைது

யூடியூபர் சங்கர் மீண்டும் கைது

கோவை சிறையில் 2 நாளில் 3 கைதிகள் உயிரிழப்பு