திண்டிவனம் மதுவிலக்கு போலீசார் 3 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

விழுப்புரம், ஜூன் 27: விழுப்புரம் மாவட்டத்தில் வெளி மாநில மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யாமல் இருக்க அவர்களை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் மதுவிலக்கு போலீசார் 3 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி தீபக்சிவாச் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க காவல்துறை சார்பில் புதுச்சேரி மதுபாட்டில், சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் 8 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க காவல்நிலைய போலீசார் அந்தந்த பகுதியில் வாகன சோதனை நடத்தி மதுகடத்தல், சாராயம் கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக மாவட்டத்தின் எல்லைகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபாட்டில், சாராயம் பிடிபடுவது அதிகரித்துள்ளது. பிடிபடும் மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக போலீசார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன்படி திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்க காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டுக்கள் முருகானந்தம், தினகரன், மகேஷ் வாகன சோதனையில் சிக்கிய 3 வாலிபர்களை பிடித்து அவர்களிடம் விலை உயர்ந்த ரூ.20,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளார்களாம். அந்த மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க மிரட்டி ரூ.5 ஆயிரம் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட 3 போலீசாரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி தீபக்சிவாச் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்