திண்டிவனம் பழைய நீதிமன்ற கட்டிடத்துக்கு `சீல்’

திண்டிவனம், ஜன. 6: திண்டிவனத்தில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதால், போலீசார் முன்னிலையில் ஊழியர்கள் நீதிமன்ற கட்டிடங்களை பூட்டி சீல் வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் நீதிமன்றம் செயல்பட்டு வந்த நிலையில், புதிதாக விழுப்புரம் சாலையில் உள்ள தென்பசார் என்ற இடத்தில் புதிய நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய நீதிமன்ற வளாகம், எந்தவித பயன்பாட்டுக்கும் இல்லாத நிலையில், அந்த கட்டிடங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் சிலர் அத்துமீறி நுழைந்து நீதிமன்ற கட்டிட வளாகத்தை பயன்படுத்துவதால் கடந்த 15 மற்றும் 18ம் தேதி குற்ற சம்பவங்கள் நடைபெற்று, திண்டிவனம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பழைய நீதிமன்ற வளாகத்தை உடனடியாக பூட்டி சீல் வைத்து, திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமென விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நேற்று திண்டிவனம் போலீசார் முன்னிலையில், நீதிமன்ற ஊழியர்கள் பழைய நீதிமன்ற வளாகத்தில் சீல் வைக்க வந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு சில வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவு நகலை காண்பித்து, நீதிமன்ற கட்டிடங்களை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை