திண்டிவனம் அருகே லாரியில் 10 டன் ரேஷன் அரிசி கடத்தல்

* கடத்தல்காரர்களை விரட்டிப் பிடித்த தாசில்தார்* தப்பிக்க விட்ட ஊழியர்கள்திண்டிவனம் : திண்டிவனம் அருகே லாரியில் கடத்தி செல்லப்பட்ட 10 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த தாசில்தார் கடத்தல்காரர்களை விரட்டி பிடித்தார். அவர்களை ஊழியர்கள் தப்பிக்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டிவனம் அடுத்த கட்டளை கிராமம் அருகே பழங்குடி இருளர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக இடம் ஆய்வு செய்ய திண்டிவனம் வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன் மற்றும் வருவாய் துறையினர் சென்றனர். அப்போது திண்டிவனம் மரக்காணம் சாலை, கட்டளை என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரியை நிறுத்தி வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன் சோதனை செய்தார். அப்போது லாரியில் இருந்த ஓட்டுநர் உட்பட 6 பேர் லாரியை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது வட்டாட்சியர் மற்றும் ஊழியர்கள் கடத்தல்காரர்களை விரட்டி சென்று 6 பேரில் 3 பேரை பிடித்தனர். பின்னர் லாரியில் சோதனை செய்தபோது 50 கிலோ எடைகொண்ட 200 மூட்டைகளில் 10 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. மாற்று ஓட்டுநர் மூலம் லாரி மற்றும் பிடிபட்ட 3 பேரை சந்தைமேடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.அங்கு கடத்தல்காரர்களை அமர வைத்துவிட்டு ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திய கடத்தல்காரர்கள் வருவாய்த் துறையினரிடம் இருந்து லாவகமாக தப்பி சென்றனர். பின்னர் கடத்தல்காரர்களை காணவில்லை என ஊழியர்கள் நாலாபுறமும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.பின்னர் இது தொடர்பாக விழுப்புரம் குடிமைப் பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் வருவாய்த்துறையினர் லாரியில் கடத்தி சென்ற 10 டன் ரேஷன் அரிசியை ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக குடிமை பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்ததுடன், தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது