திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

 

தர்மபுரி, மே 30: பாலக்கோடு, காரிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி திடீரென ஆய்வு செய்தார். பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ₹6.11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் சாந்தி, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாலக்கோடு ஒன்றியம், பஞ்சப்பள்ளி ஊராட்சியில் ₹89.58 லட்சம் மதிப்பீட்டில் காடுசெட்டிபட்டி முதல் கரகூர் வரை தார்சாலை பணிகளையும், கரகூர் முதல் செங்காடு வரை ₹61.05 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலைகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பஞ்சப்பள்ளி ஊராட்சி, சுரகுரிக்கை கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, செல்போன் டவர் அமைப்பது குறித்தும், ₹4.60 கோடி மதிப்பீட்டில் கேசர்குளி அல்லா ஆற்றின் குறுக்கே, பாலம் கட்டுமான பணிகளையும், கும்மனூர் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு என மொத்தம் ₹6.11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அனைத்து பணிகளையும் தரமாகவும், துரிதமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, காரிமங்கலம் ஒன்றியம், ஜம்பூத் மலைக்கிராம மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம், பிடிஓ சுருளிநாதன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

 

Related posts

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது

குன்றத்து மலை மீது சோலார் மின் விளக்கு

மேலூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்