திடீர் பாசம்…?

தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தை துவக்கியுள்ளனர். கடந்த காலங்களில் தமிழக மக்கள் அனுபவித்த இன்னல்களை மறைக்கும் முயற்சியில் ஆளுங்கட்சி இறங்கியுள்ளது. புதிய திட்டங்கள் மூலம் மக்களை தங்களது பக்கம் இழுத்து விடலாம் என அரசு எண்ணுகிறது. இது ஒரு போதும் நடக்காது என்பதை ஆட்சியாளர்கள் தேர்தல் முடிவில் தெரிந்து  கொள்வார்கள்.சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. குறிப்பாக, பீகார் தேர்தலில் ஆணையத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நடுநிலையாக உள்ள தேர்தல் ஆணையம் விமர்சனத்துக்கு உள்ளாகி வருவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தேர்தலில் ஆளுங்கட்சியினரின் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முழுமையாக தடுக்க முடியவில்லை என்பது வேதனைக்குரியது. இனியாவது அதிரடி நடவடிக்கை மூலம், அனைத்து தரப்பினரும் போற்றும் வகையில் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு ஆணையத்துக்கு உள்ளது.ஒரு ஓட்டு என்றாலும் அது ஜனநாயகத்துக்கு மிகத் தேவை என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ஆராய்ச்சிக்காக விண்வெளிக்கு சென்றவர்களுக்குக் கூட வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது. முக்கியமாக, முன்னாள் அதிபர் டிரம்ப்பின் தில்லுமுல்லு வேலைகளுக்கு இடம் கொடுக்காமல், அதிகாரிகள் நேர்மையுடன் செயல்பட்டனர். தமிழகத்திலும் வாக்குரிமையின் வலிமையை உணர்ந்து, அனைத்து தரப்பினருக்கும் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. மக்களுக்காக பணியாற்றும் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா ஊரடங்கு போன்ற கடினமான சூழ்நிலையில் தேர்தலை நடத்தி முடிப்பதை காட்டிலும், எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல், அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்காமல் நேர்மையுடன் தேர்தல் நடத்தப்பட்டது என்ற பெருமையை தேர்தல் ஆணையம் பெற வேண்டும். வேண்டாம் எனக் கூறிய திட்டங்களை செயல்படுத்த துடித்த அரசு, நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு தொடுத்து மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை மக்கள்  மறந்து விடவில்லை. கடந்த காலம் முதல் தற்போது வரை பல இன்னல்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர். மக்களின் துயரங்களை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தலைதூக்கி வருகின்றன. அரசு சொல்லும் வளர்ச்சி ‘எங்கே உள்ளது’ என மக்களுக்கு நன்றாக தெரியும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம் கடந்த கால சம்பவம் மற்றும் துயரங்களை மக்கள் மறந்து விடுவார்கள் என ஆட்சியாளர்கள் கனவு காண்கின்றனர். இது  நடக்காது. மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். கடந்த காலத்தில் தாங்கள் அனுபவித்த வேதனைகள், வாழ்வாதாரத்துக்காக போராட்டம் நடத்திய அவல நிலையை அவர்கள் மறக்கவில்லை.ஆசைவார்த்தை கூறி மக்களை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணம் எடுபடாது. ஏமாற்ற நினைத்தவர்கள், ஏமாற்றம் அடைவார்கள். முக்கியமாக, சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் பாசத்தை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்….

Related posts

அடுத்த அசத்தல்

‘மூன்றில் ஒரு பங்கு’

பாஜ அரசின் அவலம்