திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அசத்தும் மாநகராட்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி செல்லும் சாலையில் முருகபவனம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 11.21 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டு பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் நாள் ஒன்றுக்கு 92 மெட்ரிக் டன் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. மேலும் இப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்து வந்தது. இதனால் முருகபவனம் பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சு திணறல், தோல் வியாதி என பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வந்தனர்.இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் தற்பொழுது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆர்.எம்.காலனி மெயின் ரோடு, லயன் தெரு, சந்தப்பேட்டை, அண்ணா நகர், பாறைப்பட்டி, வேடப்பட்டி, கோவிந்தாபுரம் மின் மயானம், உள்ளிட்ட பகுதிகளில் 9 நுண்ணுயிர் செயலக மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு மாநகராட்சி பகுதிகளில் பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து வாங்கி வந்து நுண்ணுயிர் செயலாக்க மையத்திற்கு கொண்டு வருகின்றனர். இங்கு மக்கும் குப்பைகளை அரைத்து பின்பு உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.தனிநபருக்கு கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கா குப்பையான பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை சிமெண்ட் பேக்டரிக்கும் தார் சாலை அமைப்பதற்கு அனுப்பப்பட்டு வந்தது. மேலும் இவைகளை வேடபட்டி அருகே உள்ள எரியூட்டு மையத்தில் எரிக்கப்பட்டு அப்புறப்படுத்தி வருகின்றனர். மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கூறுகையில்:- திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மாநகராட்சி பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட நுண்ணுயிர் செயலாக்க மையங்கள் வருடத்திற்கு ஒன்று இரண்டு தான் இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைத்து ஒன்றரை வருடங்களில் 9 நுண்ணுயிர் செயலாக்க மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நுண்ணுயிர் கூடம் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.இன்னும் பத்து நுண்ணுயிர் செயலாக்க மையங்கள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ஐந்து மையங்கள் தேவை இருக்கிறது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் இரண்டு வார்டுக்கு ஒரு நுண்ணுயிர் கூடம் என மொத்தம் 24 நுண்ணுயிர் கூடங்கள் அமைக்கப்பட உள்ளது.முருகபவனம் பகுதியில் செயல்பட்டு வந்த குப்பை கிடங்கால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்காக தனியார் பங்களிப்புடன் 13 கோடி ரூபாய் செலவில் முருகபவனம் குப்பை கிடங்கில் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது இரண்டு லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகள் உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த பணி முற்றிலும் நிறைவடைந்து விடும். மேலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேரும் குப்பைகளை தெருக்களில் ஆங்காங்கே வீசி செல்லாமல் தரம் பிரித்து வழங்கி ஒத்துழைக்க வேண்டும். அப்பொழுதுதான் நகரங்களின் தூய்மைகான மக்கள் இயக்கம் வெற்றியடையும் என தெரிவித்தார்.மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறுகையில்:- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு நுண்ணுயிர் செயலாக்க மையம் அமைக்கப்பட உள்ளது. அந்தந்த வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கேயே தரம் பிரித்து நுண்ணுயிர் மையத்தில் உரமாக்குவதால் குப்பைகள் ஏற்றிச்செல்லும் வாகனத்தின் எரிபொருள் சேமிக்கப்படும். காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம். மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் காம்பேக்ட் லாரி மூலம் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது. கூடிய விரைவில் லாரி மூலம் குப்பைகள் கொண்டு செல்லும் பணி நிறுத்தப்படும்.அது மட்டுமல்லாமல் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் மொத்த குப்பைகள் உற்பத்தியாளர்களான உணவகங்கள், மருத்துவமனைகள், ஹாஸ்டல், வணிக வளாகங்கள் பெரு நிறுவனங்கள் இவர்களிடமிருந்து குப்பைகள் வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் 25 மெட்ரிக் டன் குப்பைகளை வாங்குவதில்லை. அப்போதுதான் எனது குப்பை எனது பொறுப்பு என்ற உணர்வு வரும். மேலும் முருகபவனம் குப்பை கிடங்கை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் கொண்டு செல்வதில்லை. இன்னும் ஒரு சில மாதத்தில் முற்றிலுமாக அங்குள்ள குப்பைகள் அகற்றப்பட்டு முருகபவனம் குப்பை கிடங்கு மூடுவிழா காண தயாராகி வருகிறது என தெரிவித்தார்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்