திசையன்விளை சுடலை ஆண்டவர் கோயில் ஆவணி கொடை விழாவில் இன்று மஞ்சள் பெட்டி ஊர்வலம்

திசையன்விளை, ஆக.25: திசையன்விளை வடக்குத்தெரு  சுடலை ஆண்டவர் கோயில் ஆவணி பெருங்கொடை விழாவில் சிறுமிகள், பெண்கள் பங்கேற்கும் மஞ்சள் பெட்டி ஊர்வலம் இன்று (25ம் தேதி) நடக்கிறது.
தென்தமிழகத்தின் சிறப்பு மிக்க திசையன்விளை சுடலை ஆண்டவர் கோயில் ஆவணி கொடை விழா கடந்த 20ம் தேதி துவங்கி தொடர்ந்து 6 நாட்களாக விமரிசையாக நடந்து வருகிறது. 5ம் நாளான நேற்று (24ம் தேதி) வள்ளியூர் கெட் இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சமையல் போட்டி நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதலிடம் வென்ற செல்விக்கு பாரத் காஸ் வெங்கடேஷ்வரா ஏஜென்ஸி உரிமையாளர்கள் தங்கதுரை, பிரவீன் ஆகியோர் குளிர்சாதன பெட்டி வழங்கினர். 2ம் இடம்பிடித்த வைகுண்டமணிக்கு வாஷிங்மெசினும், 3ம் இடம் பிடித்த பத்மபவதிக்கு டி.வி.யும் பரிசாக வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் கடை வியாபாரிகள் சங்கச்செயலாளர் ஜெயராமன், ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்க மாநில துணைத்தலைவர் தங்கையா கணேசன், நகரத்தலைவர் சாந்தகுமார், அரிமா சங்க முன்னாள் ஆளுநர் சுயம்புராஜன், லிங்கராஜ், கதிர்வேல், ரோட்டரி ரமேஷ், மகளிர் சேவா சங்கத்தலைவர் முருகேஸ்வரி, செயலாளர் புஷ்பலட்சுமி கனகராஜ் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து சமயபொற்பொழிவு, , பரதநாட்டிய நிகழ்ச்சி,  சுடலை ஆண்டவர் இந்து புதுஎழுச்சி மன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது.விழாவின் நிறைவு நாளான இன்று காலை 6.30 மணிக்கு அன்னபூஜையும், தொடர்ந்து இரவு 12 மணி வரை தொடர் சிறப்பு அன்னதானமும் நடக்கிறது.

9 மணிக்கு கோயில் மகா மண்டபத்தில் ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளும் சிங்காரிமேளம், பேண்ட்செட், டிரம்செட், இசை சங்கமம் நடக்கிறது. 11 மணிக்கு மன்னராஜா கோயிலில் இருந்து தாரை தப்பட்டை, கொம்பு வாத்தியம் முழங்க மேளதாளத்துடன் முத்துக்குடை பவனிவர சிறுமியர், பெண்கள் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், சுவாமி மஞ்சள் நீராடலும் நடக்கிறது. மறுநாள் அதிகாலை 1 மணிக்கு கந்தன் கருணை என்ற தலைப்பில் ஆசிரியர் சிவகுமார் சமயசொற்பொழிவு ஆற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து சுடலை ஆண்டவர் சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்டமும், 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் பேஷன் ஷோ மற்றும் இன்னிசை நகைச்சுவை பட்டிமன்றமும் நடக்கிறது. அத்துடன் கண்கவர் வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் வரிதாரர்கள் செய்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு