திசையன்விளை அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை: இதுவரை 16 மகளிருக்கு பிரசவம் என நர்ஸ் பெருமிதம்

திசையன்விளை: நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே இளையநயினார் குளத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா(25). இவருக்கும் திசையன்விளை அருகே சிவந்தியாபுரத்தைச் சேர்ந்த கணேஷ்(29) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணேஷ், சென்னையில் உள்ள கேஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா, 2வதாக கர்ப்பம் அடைந்தார். பிரசவத்திற்காக தாய் வீடான இளையநயினார் குளத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா வந்தார். நேற்றிரவு அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ராதாபுரத்தில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த ஆம்புலன்ஸ் காவல்கிணறு விலக்கு அருகே நடந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க சென்றதால், திசையன்விளையைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ், இளையநயினார் குளத்திற்கு வந்து ஐஸ்வர்யாவையும், உதவிக்கு அவரது உறவுப் பெண் ஒருவரையும் ஏற்றிக் கொண்டு, கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்றது.அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த டாக்டர்கள், அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். உறவினர்கள் வற்புறுத்தியும் ஐஸ்வர்யாவுக்கு பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்யாமல் கூடங்குளம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் தட்டிக் கழித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து அதே ஆம்புலன்சில் ஐஸ்வர்யாவும், அவரது உறவுப் பெண்ணும் ஆசாரிபள்ளத்திற்கு புறப்பட்டனர். ராதாபுரத்திலிருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ள குமிளம்பாடு பகுதியில் ஆம்புலன்ஸ் செல்லும்போது ஐஸ்வர்யாவுக்கு பிரசவ வலி அதிகமாகவே, டிரைவர் (பைலட்) கல்யாணிசுந்தரம் ஆம்புலன்சை ஒரு ஓரமாக நிறுத்தினார். ஐஸ்வர்யாவுக்கு ஆம்புலன்சில் இருந்த நர்ஸ் ராஜேஸ்வரி பிரசவம் பார்த்தார். இதில் ஐஸ்வர்யாவுக்கு இரவு 12.30 மணி அளவில் அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் டிரைவர் கல்யாணிசுந்தரம், மெதுவாக ஆம்புலன்சை ஓட்டிச் சென்று தாயையும், குழந்தையையும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆம்புலன்சில் ஐஸ்வர்யாவுக்கு பிரசவம் பார்த்த நர்ஸ் ராஜேஸ்வரியையும், ஆம்புலன்சை பதற்றப்படாமல் பாதுகாப்பாக ஓட்டிய டிரைவர் கல்யாணிசுந்தரத்தையும், அவரது உறவினர்களும், பொதுமக்களும் பாராட்டினர் பிரசவம் குறித்து நர்ஸ் ராஜேஸ்வரி கூறுகையில் இந்த ஆம்புலன்சில் இதுவரை ஐஸ்வர்யாவை சேர்த்து 16 பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது. 16 குழந்தைகள் பிறந்துள்ளனர். அனைத்து பிரசவமும் எந்த பிரச்னையும் இன்றி நடந்துள்ளது. தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று பெருமையாக குறிப்பிட்டார்….

Related posts

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி