தா.பழூர் மேல சிந்தாமணி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்

 

தா.பழூர்,செப்.2: தா.பழூர் மேல சிந்தாமணி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திகடன் செலுத்தினர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேல சிந்தாமணி கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது.

இதையொட்டி தர்மர் பிறப்பு உற்சவம் துவங்கி, விருப்பாச்சாரியார் பள்ளிக்கூடம், துரோணாச்சாரியார் பள்ளிக்கூடம், அம்மன் பிறப்பு, வில்வலைப்பு, திருக்கல்யாணம், தபசு, வீராட பருவம், பூவெடுப்பு, கீசக நாடகம், கிருஷ்ணன் தூது, அரவான் கடபலி, சதுரவர்த்தி கோட்டை அழித்தல், கர்ண மோட்சம், கூந்தல் முடிப்பு உள்ளிட்ட பாரத நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று தீமிதி திருவிழாவானது துவங்கியது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் வண்ணான் ஏரிக்கரையில் இருந்து பூங்கரகம் சூடிக்கப்பட்டு, பூங்கரகம், அக்னி சட்டி உள்ளிட்டவைகளை மேல சிந்தாமணி முக்கிய வீதிகள் வழியாக கரகம் எடுத்து வந்தனர்.

இதில் பிரத்யோகமாக தயார் செய்யப்பட்டிருந்த தீக்குண்டத்தில் காப்பு கட்டு விரதம் இருந்த பக்தர்கள் இறங்கினர். அப்பொழுது அங்கே கூடி இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்களை எழுப்பியவாறு அம்மனை வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளான தா.பழூர், கீழ சிந்தாமணி, கோடங்குடி காரைக்குறிச்சி, இடங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்து வணங்கி சென்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு