தாளவாடி மலைப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது; வேறு கூண்டுக்கு மாற்றியபோது தப்பி ஓடியதால் அதிர்ச்சி

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி பகுதியில் பதுங்கிய சிறுத்தை அப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தாளவாடி வனத்துறையினர் டிரோன் மூலம்  சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர். மேலும், சிறுத்தையை பிடிப்பதற்காக அப்பகுதியில் கூண்டு வைத்தனர்.  தினமும் இரவில் வனத்துறையினர் துப்பாக்கி ஏந்தியபடி அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.இந்நிலையில், கல்குவாரி பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை நேற்று காலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.  தகவல் அறிந்த தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் சென்று கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டார். கால்நடை மருத்துவர் மூலம் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, பரிசோதித்ததில்  சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. அந்த சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவதற்கான முயற்சியில் ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக வேறொரு கூண்டிற்கு சிறுத்தையை மாற்ற முயற்சித்த போது திடீரென கூண்டை விட்டு வெளியேறி தப்பி ஓடியது. இதைக் கண்ட வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அருகே உள்ள புதர்களில் சிறுத்தை பதுங்கியுள்ளதா? என தேடும் பணியில் ஈடுபட்டனர். மயக்க ஊசி செலுத்தப்பட்டிருந்ததால் சிறுத்தையை கண்டுபிடித்து மீண்டும் கூண்டில் அடைத்து, பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்….

Related posts

நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது..கல்வித்துறையில் மிகப்பெரிய மோசடி: திமுக எம்.பி. ஆ.ராசா சாடல்

மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 13 குடும்பத்தினர் மீட்பு

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 115% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம்