தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

திருவாடானை, ஆக.9: திருவாடானை அருகே ஆதியாகுடி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோவணி பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆதியாகுடி கீழக்குடியிருப்பு வரை செல்லும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள பிரதான சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலையாக போடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் தினசரி இந்த சாலையில் செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்கள் பதம் பார்க்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள அனைவரும் ஒரு வித அச்சத்துடன் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மேலும் அப்பகுதி மக்கள் அவசரகால சிகிச்சை மற்றும் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸை அழைத்தால் கூட அப்பகுதிக்கு வர மறுப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் இந்த சேதமடைந்த சாலையில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் இவ்வழியாக நடந்து செல்லும் போது அந்த சாலையில் உள்ள சிறு பள்ளங்களில் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் வாகனங்களை பதம் பார்க்கும் பஞ்சரான சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப சாவு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி; 3 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு திடீரென தீப்பிடித்த வேப்பமரம்